ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க கூறியதையும், ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க என்ன செய்கிறார் என்பதையும் மக்கள் ஒப்பிட்டுப் பார்க்கின்றனர். அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைப்பேன் என அவர் கூறினாலும் இன்று அவரால் அரிசியைக் கூட முறையாக வழங்க முடியவில்லை. தேங்காய்களுக்கு கூட வரிசைகளும் காணப்படுவதாக சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஜனாதிபதிக்கு காணப்படும் நிறைவேற்று அதிகாரங்களைப் பயன்படுத்தி குறைந்தபட்ச விலையை நிர்ணயிக்க முடியும். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. எரிபொருள் விலை, மின்சாரக் கட்டணம், வரிகள் குறைப்போம் என்றும் தெரிவித்தார். ஆனால் அவை எதுவும் நடக்கவில்லை என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
2024 பொதுத் தேர்தலை இலக்காக் கொண்டு கோட்டை, ஒபேசேகரபுர தொகுதி மக்களுடனான சந்திப்பொன்று நேற்று திங்கட்கிழமை (04) தினம் ஐக்கிய மக்கள் சக்தியினதும் ஐக்கிய மக்கள் கூட்டணியினதும் தலைவரான சஜித் பிரேமதாச தலைமையில் இடம்பெற்றது.
ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இச்சந்திப்பில் கட்சி செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எரிபொருள் விலை சூத்திரம் தவறு என கருத்து தெரிவித்த அனுரகுமார திஸாநாயக்க, இன்று எரிபொருள் விலை சூத்திரத்தின் அடிமையாக மாறியுள்ளார். எரிபொருள் விலை குறைப்பதாக கூறிக் கொண்டு செல்வந்த உயர் வர்க்கத்தினர் பயன்படுத்தும் வாகனங்களுக்கு மட்டும் தேவைப்படும் எரிபொருளுக்கான விலையை மட்டுமே குறைத்துள்ளனர். சாதாரண மக்கள் பயன்படுத்தும் 92 ஒக்டேன் எரிபொருளுக்கான விலை குறைக்கப்படவில்லை என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
கடவுச்சீட்டுக்கு காணப்படும் வரிசைக்கு தீர்வைத் தருவோம் என்று கூறினாலும், இன்று கடவுச்சீட்டுக்கான வரிசை அதிகரித்து வருகிறது. இவர்கள் நாட்டு மக்களை நாளுக்கு நாள் ஏமாற்றி வருகின்றார்கள்.
அரச உத்தியோகத்தர்களுக்கு ஒவ்வொரு 6 மாதங்களு ஒரு தடவை சம்பளத்தை அதிகரிப்பதாக கூறினர், என்றாலும் இதற்கான எந்த நடவடிக்கையையும் இதுவரை மேற்கொண்டபாடில்லை. இந்த இரட்டை நிலைப்பாடான அரசியலால் முழு நாடுமே ஏமாந்துபோயிருப்பதாக சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் அடிமையாக நாம் செயல்பட மாட்டோம் என வாய்கிழிய பேசிய மக்கள் விடுதலை முன்னணியினர் தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் அடிமையாக மாறி சர்வதேச நாணய நிதியத்தின் தாளத்திற்கு ஆடிவருகின்றனர்.
தற்போதைய ஜனாதிபதி சர்வதேச நாணய நிதியத்தின் அடிமையாக செயற்பட்டாலும், ஐக்கிய மக்கள் சக்தி அவ்வாறு நடந்து கொள்ளாது. இதற்கான வேலைத்திட்டம் எம்மிடம் காணப்படுகின்றன. ஆட்சிக்கு வந்தவுடன் இந்த ஒப்பந்தம் மாற்றப்படும் என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.