Saturday, April 19, 2025
spot_img
Homeஇந்திய செய்திகள்"2026 சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. டெபாசிட் கூட வாங்காது.." - ஆர்.எஸ்.பாரதி

“2026 சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. டெபாசிட் கூட வாங்காது..” – ஆர்.எஸ்.பாரதி

தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு சட்டசபையில் நேற்று 110 விதியின் கீழ் மாநில சுயாட்சி தொடர்பாக முக்கிய அறிவிப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். மாநில நலனில் அக்கறை இல்லாத அதிமுகவும் அதன் கூட்டாளியாக பாஜகவும் வெளிநடப்பு செய்தன. இதன் மூலம் டெல்லி சர்வாதிகாரத்தின் அடிமைகள் நாங்கள் என அதிமுக, பாஜக உறுப்பினர்கள் தங்களை வெளிப்படுத்தினர்.

மாநில நலன் மற்றும் மாநில சுயாட்சி சார்ந்து திமுக போராடியபோதெல்லாம் அண்ணா காலத்தில் இருந்தே “பிரிவினைவாதம் பேசுகிறது திமுக” என அவதூறு பரப்பினார்கள். இப்போது அதே அவதூறை மோடி அமித்ஷாவின் தமிழ்நாட்டு புதிய ஏஜெண்ட் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

“மாநிலங்களை பிரிக்க வேண்டும் என பிரிவினைவாதத்தை முதல்-அமைச்சர் தூண்டுகிறார்” என நயினார் நாகேந்திரன் பேசியதில் இருந்தே அண்ணா திமுகவில் இருந்த அவருக்கு அண்ணாவின் அடிப்படை சித்தாந்தம் கூட தெரியாத ரசிக மனநிலையில் இருந்திருப்பதை காட்டுகிறது. “மாநிலங்கள் அனைத்து அதிகாரங்களையும் கொண்டவையாக விளங்கினால்தான் மாநிலங்கள் வளர்ச்சி அடையும்; இந்தியாவும் வலிமை பெறும்” என்று சட்டசபையில் நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேசியதை கேட்டிருந்தாலே அவரின் நல்ல நோக்கம் புரிந்திருக்கும்.

டெல்லி எஜமானர்கள் கோபித்துக்கொண்டால் பதவிக்கு ஆபத்து நேருமோ என்ற பதற்றத்தில் அவசரமாக பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துவிட்டு, அவதூறு கருத்தை ஊடகங்கள் மூலம் நயினார் நாகேந்திரன் பரப்பி இருப்பது கண்டிக்கத்தக்கது.

இந்தியா என்பது முழு உடல், அதன் உறுப்புகள் தான் மாநிலங்கள் என்பதையே அரசியலமைப்புச் சட்டத்தின் ஷரத்துகள் சொல்கின்றன. மாநிலங்களுக்கான பலம் என்பது இந்தியாவிற்கான பலம். அதாவது மாநிலங்கள் பலம் பெற்றால் தான் இந்தியா வலுப்பெறும். நமது உடலில் அனைத்து உறுப்புகளும் சீராக இயங்கினால் தான், முழு உடலும் வலுப்பெறும் என்ற அடிப்படைக் கூட தெரியாதவராக நயினார் நாகேந்திரன் இருப்பதை பார்த்தாலே திராவிடக் கட்சியில் இருந்து அதற்கு நேரெதிர் கொள்கை கொண்ட ஆரிய கட்சிக்கு சென்றதற்கான காரணம் விளங்கும்.

உடலில் உள்ள உறுப்புகள் பலம் பெறுவது, முழு உடலை வலிமையற்றதாக்கி விடுமா? என்பது போல மாநில உரிமைகளை திமுக கோருவது இந்திய நாட்டை வலிமையற்றதாக மாற்றிவிடுமா? என்பதற்கு நயினார் நாகேந்திரன் பதில் சொல்ல வேண்டும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உரையில் “ஒற்றுமையை பாதிக்காத வகையில் உரிமையை மீட்டு எடுப்போம்” என்று குறிப்பிட்டதன் அர்த்தம் நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு தெரியுமா?

அண்ணா உருவாக்கிய மாநில சுயாட்சி என்கிற கருவிற்கு கலைஞர் உருவம் கொடுத்தார்; அந்த உருவத்திற்கு தற்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் செயல்வடிவம் கொடுத்து வருகிறார். இந்த அரசியல் நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு புரியவில்லை என்றால் அண்ணா திமுக என்ற திராவிடக் கட்சியில் இருந்தார் என்பதற்கு வெட்கப்பட வேண்டுமா?

“இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள மாநிலங்களின் நியாயமான உரிமைகளைப் பாதுகாக்கவும், மத்திய-மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்திடவும், சுப்ரீம்கோர்ட்டு முன்னாள் நீதியரசர் குரியன் ஜோசப்பைத் தலைவராகக் கொண்ட குழு அமைக்கப்படுகிறது” என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் குறிப்பிட்டதை கேட்டாலே தமிழ்நாட்டிற்கு மட்டும் உரிமைகளை திமுக கேட்கவில்லை.

மத்திய-மாநில அரசுகள் இடையேயான உறவுகளை மேம்படுத்தும் செயல் எப்படி பிரிவினைவாதமாகும்? நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் கும்பலும் குஜராத்தை சேர்ந்த பாஜக தலைமையும் ஏவும் பணியை மாநிலங்களில் உள்ள பாஜக தலைமை சிரமேற்று செய்து முடிப்பது போல மாநிலங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்-அமைச்சரும் இருக்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் நினைப்பது அவரின் அரசியல் புரிதல் குறைப்பாட்டை காட்டுகிறது.

“திமுக பிரிவினைவாதம் பேசுகிறது” என திராவிட எதிர்ப்பாளர்கள் பேசிய 50 ஆண்டுக் கால பழைய முனை மழுங்கிய வாதத்தை விட்டுவிட்டு, மத்திய அரசின் கட்டளைக்கு அடிபணியும் மாநிலம் தமிழ்நாடு இல்லை; மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி’ என்கின்ற பரந்துபட்ட கொள்கை முழக்கம் திமுகவுடையது மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்களின் உணர்விலும் உயிரிலும் கலந்த முழக்கம் என்பதால் தமிழ்நாட்டு உரிமைகளை பறித்தால் முன்பைபோல பாஜக 2026 தேர்தலிலும் டெபாசிட் கூட வாங்காது என எஜமானர்களுக்கு நயினார் நாகேந்திரன் சொல்வது நல்லது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments