ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 63 ரன்கள் அடித்தார். சென்னை தரப்பில் ஜடேஜா, பதிரானா தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
பின்னர் 167 ரன் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணி 19.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 168 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஷிவம் துபே 43 ரன்கள் அடித்தார். லக்னோ தரப்பில் ரவி பிஷ்னோய் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இந்த ஆட்டத்தில் சென்னை அணி மிடில் வரிசையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது 6-வது விக்கெட்டுக்கு இம்பேக்ட் வீரர் ஷிவம் துபேவுடன் கேப்டன் தோனி கூட்டணி அமைத்தார். இதில் அதிரடியாக விளையாடிய தோனி 11 பந்துகளில் 26 ரன்கள் அடித்து சென்னை அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.
அத்துடன் தலா ஒரு ஸ்டம்பிக், கேட்ச் மற்றும் ரன் அவுட் உட்பட இறுதி கட்டத்தில் அதிரடியாக விளையாடி சென்னை அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்த தோனிக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இதன் மூலம் தன் மீதான விமர்சனங்களுக்கு தோனி தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
இந்நிலையில் தோனியை பல முன்னாள் வீரர்கள் பாராட்டி வருகின்றனர். அந்த வரிசையில் இந்திய முன்னாள் வீரரான முகமது கைப், “தோனி ஒன்றும் முடிந்து போன பினிஷர் கிடையாது.. படம் இன்னும் மீதமிருக்கிறது நண்பர்களே” என்று பாராட்டியுள்ளார்.
மற்றொரு இந்திய வீரரான இர்பான் பதான், “சிஎஸ்கே திரும்பி வந்துவிட்டது. துபே & தோனி அற்புதமான பினிஷிங்” என்று பாராட்டியுள்ளார்.