தலைநகர் டெல்லியின் பஹம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் 3 பேர் நேற்று மாலை டெல்லி பல்கலைக்கழக மைதானத்தில் கிரிக்கெட் விளையாட சென்றுள்ளனர்.
கிரிக்கெட் விளையாடிவிட்டு 3 பேரும் ஒரேபைக்கில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். பிரஹதி மேம்பாலத்தில் பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது செல்போனில் கால் வந்துள்ளது. இதனால் மேம்பாலத்திலேயே பைக்கை நிறுத்திவிட்டு செல்போனில் பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது வேகமாக வந்த கார், இளைஞர்கள் நிறுத்தி வைத்திருந்த பைக் மீது மோதியது. அப்போது பைக்கின் அருகே நின்றுகொண்டிருந்த 3 இளைஞர்கள் மீதும் கார் மோதியது. இதில், 23 வயது இளைஞர் மேம்பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டார். எஞ்சிய 2 பேரும் படுகாயமடைந்தனர்.
ஆனால், மேம்பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட இளைஞர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு ரோஷ்னி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், இளைஞர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். படுகாயமடைந்த மேலும் 2 இளைஞர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பைக் மீது காரை மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்ற நபரை சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.