Wednesday, November 11, 2026
spot_img
Homeகனடா செய்திகள்அமெரிக்க இடைத்தேர்தல் வெற்றிக்குப் பின்னரும் வர்த்தக ஒப்பந்த முடிவு ட்ரம்ப் நிர்வாகத்திடமே – மார்க் கார்னி!

அமெரிக்க இடைத்தேர்தல் வெற்றிக்குப் பின்னரும் வர்த்தக ஒப்பந்த முடிவு ட்ரம்ப் நிர்வாகத்திடமே – மார்க் கார்னி!

அமெரிக்க இடைத்தேர்தலில் ஜனநாயகக் கட்சியினர் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றுள்ள போதிலும், அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பான இறுதி முடிவுகளை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகமே எடுக்கும் என கனேடியப் பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை (10) மொன்றியலில் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியினர் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, ட்ரம்ப் நிர்வாகத்தின் வர்த்தகக் கொள்கைகள் மற்றும் கனடா மீதான வரி விதிப்புகள் தொடர்பில் அரசியல் அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.

கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள வரிகள், தேர்தல் பிரசாரத்திலும் முக்கிய பேசுபொருளாக அமைந்திருந்தன. இந்த வரி விதிப்புகள் பொருட்களின் விலையேற்றத்துக்குக் காரணமாக அமைவதாக ஜனநாயகக் கட்சியினர் குற்றஞ்சாட்டியதுடன், அவற்றுக்கு எதிராகச் செயற்படப் போவதாகவும் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், வர்த்தக ஒப்பந்தங்களைத் தீர்மானிக்கும் அதிகாரம் அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு அமெரிக்காவின் நிறைவேற்று அதிகாரத்திடமே இருக்கும் என மார்க் கார்னி சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக, அமெரிக்க ஜனாதிபதி, அவரது நிர்வாகம் மற்றும் அமெரிக்க மக்களே வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பான தீர்மானங்களில் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்றும், சட்டமன்ற உறுப்பினர்கள் மாத்திரம் தீர்மானிக்கும் விடயமல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க ஆளுநர்கள் மற்றும் செனட்டர்கள் உள்ளிட்ட அதிகாரிகளைத் தொடர்புகொண்டு வர்த்தக விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாட கியூபெக் மாகாணம் திட்டமிட்டுள்ள நிலையில், அதற்குப் பதிலளிக்கும் வகையில் கார்னி இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

இதன்மூலம், அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவதற்கான முயற்சிகளில் ட்ரம்ப் நிர்வாகத்துடனான பேச்சுவார்த்தைகளுக்கு கனடா தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments