Tuesday, November 3, 2026
spot_img
Homeகனடா செய்திகள்காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர் மார்க் கார்னி

காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர் மார்க் கார்னி

அன்டிகுவா மற்றும் பார்புடாவில் நடைபெறவுள்ள காமன்வெல்த் அரசுத் தலைவர்கள் மாநாட்டில் (CHOGM) கலந்துகொள்வதற்காகப் பிரதமர் மார்க் கார்னி எதிர்வரும் திங்கட்கிழமை (09.11.2026) பயணிக்கவுள்ளார்.

அமெரிக்காவின் வர்த்தகக் கொள்கைகளால் உலகளவில் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில், காமன்வெல்த் அமைப்பை ஒரு மாற்று வர்த்தகச் சந்தையாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் ஷிர்லி பொட்ச்வே கனேடிய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அழைப்பு விடுத்துள்ளார்.

அன்டிகுவா மற்றும் பார்புடாவின் தலைநகரான செயின்ட் ஜோன்ஸில் (St. John’s) இந்த வாரம் நடைபெறும் இரு வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் இம்மாநாட்டில், உலகளாவிய வர்த்தக நெருக்கடிகளை எதிர்கொள்வது மற்றும் உறுப்பு நாடுகளுக்கிடையிலான கூட்டுறவை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

காமன்வெல்த் உறுப்பு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்தை தற்போதைய அளவிலிருந்து 2 டிரில்லியன் டொலராக இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகச் செயலாளர் நாயகம் பொட்ச்வே தெரிவித்தார்.

அமெரிக்காவின் வர்த்தகத் தடைகளுக்கு மத்தியில் நம்பகமான பங்காளர்களை நாடும் தமது உறுப்பு நாடுகளுக்கு இக்கூட்டமைப்பு சிறந்த மாற்றாக அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கனடாவைப் பொறுத்தவரை, காமன்வெல்த் அமைப்பில் உள்ள 56 நாடுகளுடன் ஏற்கனவே ஆண்டுதோறும் சுமார் 100 பில்லியன் டொலர் மதிப்பிலான வர்த்தக ஈடுபாட்டைக் கொண்டுள்ளது.

காமன்வெல்த் அமைப்பின் இரண்டாவது மிகப்பெரிய நிதி பங்களிப்பாளராக விளங்கும் கனடா, பொருளாதார ரீதியாகத் தற்சார்பை (strategic autonomy) அடைவதற்கும், உலகளாவிய ரீதியில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களுடன் தொடர்புகளை விரிவுபடுத்துவதற்கும் இம்மாநாட்டைப் பயன்படுத்திக் கொள்ளும் எனக் கனேடிய அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, ஆப்பிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுடன் கனிம வளங்கள் மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்களில் கனடா புதிய முதலீடுகளை மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments