Monday, September 14, 2026
spot_img
Homeகனடா செய்திகள்குத்துச்சண்டை ஜாம்பவான் ஜார்ஜ் சுவாலோ 89 வயதில் காலமானார்!

குத்துச்சண்டை ஜாம்பவான் ஜார்ஜ் சுவாலோ 89 வயதில் காலமானார்!

கனடாவின் புகழ்பெற்ற ஹெவிவெயிட் குத்துச்சண்டை வீரரும், ஐந்து முறை கனடா தேசிய ஹெவிவெயிட் சாம்பியனுமான ஜார்ஜ் சுவாலோ (George Chuvalo) தனது 89ஆவது பிறந்த நாளான செப்டம்பர் 12ஆம் திகதி டொராண்டோவில் காலமானார். அவரது மரணத்துக்கான குறிப்பிட்ட காரணம் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

1956ஆம் ஆண்டு தொழில்முறை குத்துச்சண்டையில் களமிறங்கிய சுவாலோ, 1978ஆம் ஆண்டு வரை நீடித்த தனது 22 ஆண்டுகால வாழ்க்கையில் 93 போட்டிகளில் 73 வெற்றிகள், 18 தோல்விகள் மற்றும் 2 சமநிலைகள் என சிறப்பான சாதனையைப் பதிவு செய்தார். இதில் 64 வெற்றிகள் நாக்அவுட் மூலம் கிடைத்தவை. உலக தரவரிசையில் அதிகபட்சமாக 2ஆம் இடத்தையும் அவர் பெற்றிருந்தார்.

ஆனால், அவரை உலகப் புகழ் பெற்றவராக்கிய மிகப்பெரிய சாதனை, 93 தொழில்முறை போட்டிகளில் ஒருமுறைகூட குத்துச்சண்டை மேடையில் வீழ்த்தப்படாதது என்பதாகும். இதன் காரணமாக அவர் “Iron Chin” என அழைக்கப்பட்டார்.

குத்துச்சண்டை உலகின் மற்றொரு ஜாம்பவானான முகமது அலியை சுவாலோ இருமுறை எதிர்கொண்டார். 1966ஆம் ஆண்டு டொராண்டோவில் நடைபெற்ற முதல் போட்டியில் 15 சுற்றுகளையும் முழுமையாக எதிர்கொண்டு புள்ளிகள் அடிப்படையில் தோல்வியடைந்தார். 1972ஆம் ஆண்டு வான்கூவரில் நடைபெற்ற மறுபோட்டியிலும் 12 சுற்றுகள் வரை தாக்குப்பிடித்து புள்ளிகள் அடிப்படையில் தோல்வியடைந்தார். முகமது அலி, சுவாலோவை தான் எதிர்கொண்ட மிகக் கடினமான வீரர் எனப் பாராட்டியிருந்தார்.

சுவாலோ, முகமது அலி மட்டுமின்றி ஜோ ஃப்ரேசியர், ஜார்ஜ் ஃபோர்மேன், ஃப்ளாய்ட் பேட்டர்சன், எர்னி டெரெல், ஜெர்ரி குவாரி உள்ளிட்ட பல முன்னணி வீரர்களுடனும் மோதியுள்ளார். ஃப்ரேசியர் மற்றும் ஃபோர்மேனிடம் போட்டியை இடைநிறுத்தும் வகையில் தோல்வியடைந்த போதிலும், அந்தப் போட்டிகளிலும் அவர் ஒருமுறைகூட தரையில் வீழ்த்தப்படவில்லை.

குத்துச்சண்டை அரங்கிற்கு அப்பாலும் சுவாலோவின் வாழ்க்கை பல்வேறு துயரங்களை எதிர்கொண்டது. அவரது மூன்று மகன்களையும் முதல் மனைவியையும் போதைப்பொருள் மற்றும் தற்கொலை சம்பவங்களில் இழந்தார். பின்னர் கனடா முழுவதும் பள்ளிகளுக்குச் சென்று போதைப்பொருள் பயன்பாட்டின் ஆபத்துகள் குறித்து இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

கனடாவின் விளையாட்டு அரங்கில் அவர் செய்த பங்களிப்புக்காக கனடாவின் விளையாட்டுப் புகழ்க்கூடம்(Canada’s Sports Hall of Fame), உலக குத்துச்சண்டை புகழ்க்கூடம்(World Boxing Hall of Fame) உள்ளிட்ட பல கௌரவங்களைப் பெற்றதுடன், 1998ஆம் ஆண்டு Order of Canada விருதும் வழங்கப்பட்டது. குத்துச்சண்டை வரலாற்றில் “கனடாவின் மிகச் சிறந்த போராளி” எனப் போற்றப்பட்ட சுவாலோவின் மறைவு, குத்துச்சண்டை உலகில் ஒரு முக்கியமான அத்தியாயத்தின் முடிவாக பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments