அமெரிக்காவின் ஆயுதக் கையிருப்பு தொடர்பான தகவல்கள் கசிந்ததாகக் கூறப்படும் நிலையில், தகவல்களை வெளியிட்டவர்களைக் கண்டறியும் நோக்கில் பென்டகன் இராணுவ உயர் அதிகாரிகளிடம் பொய் கண்டறியும் சோதனையை நடத்தியுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை பென்டகனில் சுமார் 50 இராணுவ உயர் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதுடன், அதன் ஒரு பகுதியாக அவர்கள் பொய் கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானுடனான பல மாதகால போரினால் அமெரிக்காவின் ஏவுகணை எதிர்ப்பு ஆயுதங்களின் கையிருப்பு குறைந்துள்ளதாக கடந்த ஜூலை மாதம் செய்திகள் வெளியாகியிருந்தன. எனினும், இந்தத் தகவலை அமெரிக்க இராணுவ அதிகாரிகள் மறுத்திருந்தனர்.
தேசிய பாதுகாப்பு தொடர்பான இரகசியத் தகவல்கள் கசிவதை அமெரிக்கா மிகவும் தீவிரமாகக் கருதுவதாகவும், இது தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பென்டகன் தெரிவித்துள்ளது.
இரகசியத் தகவல்களைக் கையாளும் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு அனுமதி வழங்கும் அல்லது புதுப்பிக்கும் நடவடிக்கைகளில் பொய் கண்டறியும் சோதனை வழக்கமாக இடம்பெறும் நிலையில், தகவல் கசிவு தொடர்பான விசாரணையில் இதுபோன்ற சோதனை நடத்தப்படுவது முன்னெப்போதும் இல்லாத நடைமுறை என அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


