மாநகரசபைகள், நகரசபைகள் கட்டளைச் சட்டங்கள் மற்றும் பிரதேச சபைகள் சட்டம் ஆகிய மூன்று பிரதான சட்டங்களின் திருத்தப் பணிகள் இறுதிப் கட்டத்தை எட்டியுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் ருவன் செனரத் தெரிவித்துள்ளார்.
மேலும் 7 சட்டங்களைத் திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கமைய, காலத்திற்கு ஒவ்வாத விடயங்களைக் கொண்ட உள்ளூராட்சி தொடர்பான சட்டங்களை தற்போதைய காலத்திற்கு ஏற்ற வகையில் திருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மாத்தறை மாவட்டத்தின் மாலிம்பட பிரதேச சபை மண்டபத்தில் உள்ளூராட்சி மன்ற அதிகாரிகளுக்காக அமைக்கப்பட்ட வேலைத்திட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பிரதி அமைச்சர் ருவன் செனரத் மேற்கண்டவாறு கூறினார்.
தற்போது உள்ளூராட்சி மன்றங்கள் மக்களுக்கு மிகவும் நெருக்கமான அரசாங்க நிர்வாக மட்டமாக பல்வேறு பொதுச் சேவைகளையும் அபிவிருத்திப் பணிகளையும் ஆற்றி வருகின்றன.
அப்பணிகளை வெற்றிகரமாக நிறைவேற்றும் போது சபை நிர்வாகம், கொள்முதல் நடைமுறைகள் மற்றும் சட்டரீதியான விடயங்கள் தொடர்பில் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது.


