யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கில் பழுதடைந்த அரச பேருந்தை மாணவர்களும் பொதுமக்களும் நாளாந்தம் தள்ளி இயக்கும் அவல நிலை தொடர்கின்றது.
கட்டைக்காட்டில் இருந்து தினமும் காலை 6.00 மணிக்கு யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கும் அரச பேருந்தே இவ்வாறு பழுதடைந்த நிலையில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பேருந்து இயங்காத சந்தர்ப்பங்களில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து பேருந்தை தள்ளி இயக்குவதும், அது சாத்தியமாகாதபோது பருத்தித்துறை நோக்கி பயணிக்கும் மற்றுமொரு அரச பேருந்து மூலம் கட்டி இழுத்து இயக்குவதும் வழக்கமாகியுள்ளது.
இந்நிலையில், இன்று (4) காலை வழமைபோன்று பேருந்தை தள்ளி இயக்க முயன்ற போதும் அது இயங்கவில்லை. பின்னர் மற்றுமொரு அரச பேருந்து மூலம் கட்டி இழுத்து இயக்க முயற்சித்த போதும் பேருந்து இயங்கவில்லை.
இதனால் கட்டைக்காட்டில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி செல்லும் குறித்த பேருந்து சேவை இன்று இடம்பெறாத நிலையில், பாடசாலை மாணவர்கள், அரச உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் பாதிக்கப்பட்டனர்.
வடமராட்சி கிழக்கு பகுதிக்கு தரமான அரச பேருந்து சேவையை வழங்குமாறு ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு சந்தர்ப்பங்களில் மக்கள் கோரிக்கை விடுத்துள்ள போதிலும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, பயணிகளுக்கு தொடர்ச்சியான சிரமத்தை ஏற்படுத்தாத வகையில், நல்ல நிலையில் உள்ள அரச பேருந்தொன்றை வடமராட்சி கிழக்கு – யாழ்ப்பாணம் சேவையில் ஈடுபடுத்துமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரச பேருந்தை தள்ளித்திரியும் வடமராட்சி கிழக்கு மக்கள்
RELATED ARTICLES
Recent Comments
on Hello world!


