நாட்டில் இணைய மோசடி மற்றும் தொலைதொடர்பு பாதுகாப்பு ஆகியவற்றில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுபற்றி மத்திய தகவல் தொடர்பு துறை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறும்போது, இணைய மோசடியை தடுப்பதற்காக நெட்வொர்க் ஒன்றை உள்துறை அமைச்சகம் ஏற்படுத்தி உள்ளது.
இதனால், ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பிலான மோசடிகள் தடுக்கப்பட்டு உள்ளன. பொதுமக்களில், ஏறக்குறைய 10 லட்சம் பேரின் பணம் பாதுகாக்கப்பட்டு உள்ளது என்றார். அவர் தொடர்ந்து கூறும்போது, தொலைதொடர்பு துறை தனக்கான செயலியை நிறுவியுள்ளது. இதன் அடிப்படையில், நாங்கள் இதுவரை 2.75 லட்சம் மொபைல் போன்களுக்கான இணைப்புகளை நீக்கியுள்ளோம். 10 ஆயிரம் பேரின் எண்கள் கருப்பு பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளன என்று கூறியுள்ளார்.
இதேபோன்று இந்திய நெட்வொர்க்கில் சர்வதேச எண்கள் நுழையும் விவகாரத்தில், அழைப்பாளரை கண்டறியும் செயலி உருவாக்கப்பட்டு உள்ளது என கூறிய சிந்தியா, இதனால் கடந்த 2 மாதங்களில் 25 முதல் 30 கோடி அழைப்புகள் தடை செய்யப்பட்டு உள்ளன என்றும் கூறியுள்ளார்.
பிரதமர் மோடி சமீபத்தில் மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசும்போது, நாட்டில் டிஜிட்டல் கைது வழக்குகள் அதிகரித்து வருவது பற்றி வருத்தம் தெரிவித்ததுடன், பொதுமக்கள் இதுபோன்ற மோசடிகளில் சிக்காமல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.