சட்டத்தை விட பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான பலமான உறவு மூலமே போதைப்பொருள் பேரழிவில் இருந்து பிள்ளைகளை காப்பாற்ற முடியும். எனவே, இந்தப் பேரழிவின் மோசமான தாக்கம் மற்றும் பிள்ளைகளின் நடத்தைகளைக் கண்காணிக்கும் முறை குறித்துப் பெற்றோருக்கு நேரடி விழிப்புணர்வூட்டுவதன் ஊடாக பிள்ளைகளைப் பாதுகாப்பதில் அவர்களின் முழுமையான பங்களிப்பை பெற்றுக்கொள்வதற்கான முறையொன்றை உருவாக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.
நாட்டிலிருந்து போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்காக உருவாக்கப்பட்ட ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டுச் சபை ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (30) முற்பகல் கூடியபோதே ஜனாதிபதி இந்தப் பணிப்புரைகளை வழங்கினார்.
தமது பிள்ளை போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகும் ஆபத்து காணப்படுமாயின், பெற்றோருக்கு அது குறித்து அறிவிப்பதற்கு நம்பிக்கைக்குரிய நபர் ஒருவரின் அவசியத்தையும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுவாக ஒரு ஆசிரியர் அல்லது மதத் தலைவரின் உதவி பெற நேரிடும் என்றும் அது தொடர்பில் கவனம் செலுத்தி நம்பிக்கைக்குரிய வழிகாட்டலை வழங்கக்கூடிய முறையான செயல்திட்டமொன்றை உருவாக்குமாறும், ஆசிரியர்களை இதற்காகப் பயன்படுத்துவதாயின் அவர்களுக்கு விசேட பயிற்சி வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.
போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய விநியோக வலையமைப்பை முறியடிப்பதற்காகச் செயற்படுத்தப்படும் செயல்திட்டத்தை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.
அரச பகுப்பாய்வுத் திணைக்களத்தின் வசதிகளை விரிவுபடுத்துவதன் மூலம் அதன் பணிகளை செயற்திறனானதாக மாற்றுவதன் ஊடாக நாளாந்தம் பெறப்படும் பகுப்பாய்வு அறிக்கைகளின் அளவு அதிகரித்துள்ளதாகவும், செப்டம்பர் மாதத்தில் மட்டும் போதைப்பொருட்கள் தொடர்பான 8,000 பகுப்பாய்வு அறிக்கைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும், கடற்படை அதிகாரிகளின் உதவியுடன் தரவுகளை உள்ளடக்கும் பணிகள் செயற்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதன்போது குறிப்பிடப்பட்டது. பகுப்பாய்வு அறிக்கைகளைப் பெறுவதை செயற்திறனுடன் செயற்படுவதன் காரணமாக போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புபட்ட நிலையில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையினர் பிணையில் விடுவிக்கப்பட்டு சிறைச்சாலை நெருக்கடியைக் குறைக்க முடிந்துள்ளதாகவும் இதன் போது சுட்டிக்காட்டப்பட்டது.


