Friday, September 25, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்மனைவியை கொலை செய்துவிட்டு கணவன் தப்பி ஓட்டம்!

மனைவியை கொலை செய்துவிட்டு கணவன் தப்பி ஓட்டம்!

மட்டக்களப்பு, சித்தாண்டியில் கணவனின் தாயாரைச் சந்திக்கச் சென்ற மனைவியின் கழுத்தில் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு கணவன் தப்பி ஓடிய சம்பவம் நேற்று (24) மாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகச் சந்திவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

மாவடிவேம்பு ஆர்.டி.எஸ். வீதியைச் சேர்ந்த 32 வயதுடைய, 2 பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்துத் தெரிய வருவதாவது,

மாவடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய கூலித் தொழிலாளிக்கு உயிரிழந்த பெண்ணுக்கு திருமணம் ஆகி 10 மற்றும் 7 வயதில் மகனும் மகளும் உள்ளனர். இந்நிலையில் கூலித் தொழிலாளியான கணவன் தினமும் மதுபானம் அருந்திவிட்டு வீட்டிற்குச் சென்று மனைவியை துன்புறுத்தி வந்துள்ளார்.

சம்பவ தினமான நேற்று, மனைவியின் கையடக்கத் தொலைபேசியைக் கணவன் எடுத்துச் சென்று அதனை விற்பனை செய்து, அப்பணத்தில் மதுபானம் வாங்கிக் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

இதையடுத்து கணவன் மனைவிக்கிடையே நீண்டநேரம் தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் மனவேதனையடைந்த மனைவி, வீட்டிலிருந்து வெளியேறி கணவனின் தாயாரிடம் (மாமியார்) முறையிடுவதற்காக அங்கு சென்றுள்ளார்.

அப்போது மனைவியைப் பின்தொடர்ந்து சென்ற கணவன், தனது தாயாரின் வீட்டில் வைத்து மனைவியின் கழுத்தில் கத்தியால் குத்தியுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து பொலிஸ் அவசர சேவை 119 இற்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, கத்தியால் குத்திய கணவன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளதாகப் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, குறித்த நபர் கடந்த மாதம் 24 ஆம் திகதி போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டவர் என்றும், தீவிர மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டுப் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு நீதவானின் அனுமதியைப் பெறுவதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைச் சந்திவெளிப் பெரும் குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments