ராஜபக்ஷக்களுக்கு எதிரான வழக்குகளை எவ்வழியிலாவது விரைவுபடுத்துவதற்கே அரசு முயற்சிக்கின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
கொழும்பில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்புகளின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
நீதித்துறையின் சுயாதீனத்தைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த அரசு, தற்போது நீதித்துறையில் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கின்றது.
ராஜபக்ஷக்களைச் சிறைக்கு அனுப்புவதற்காகவே நீதியரசர்களின் பதவிக்காலம் நீடிக்கப்படுகின்றது என்று ஆளும் தரப்பு உறுப்பினர் பகிரங்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
அரசமைப்புத் திருத்தம் ஊடாக நீதியரசர்களின் பதவிக்காலத்தை நீடிக்கும் தார்மீக உரிமை அரசுக்கு இல்லை.
நீதியரசர்களின் பதவிக்காலத்தை அதிகரிக்க வேண்டுமாயின், அது தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி மக்களே அதனைத் தீர்மானிக்க வேண்டும். – என்றார்.


