சட்டமன்ற உறுப்பினர்கள் இங்கிலாந்து மன்னருக்கு விசுவாசப் பிரமாணம் மேற்கொள்வதை விருப்பத் தெரிவாக மாற்றிய மாகாணச் சட்டத்தை இடைநிறுத்தியுள்ள நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, தனது அரசாங்கம் மேன்முறையீடு செய்யும் என, கியூபெக் முதல்வர் பிளாமொண்டன் தெரிவித்துள்ளார்.
கியூபெக் மாகாண சட்டமன்றத்துக்குத் தெரிவான உறுப்பினர்கள் இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்ள்ஸுக்கு விசுவாசப் பிரமாணம் எடுப்பதை 2022 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட மாகாணச் சட்டமானது, விருப்பத் தெரிவாக மாற்றியது.
தற்போது அந்த மாகாணச்சட்டத்தினை கியூபெக் உயர் நீதிமன்றம் இடைநிறுத்தியுள்ளது.
மேலும், கியூபெக் மாகாண சட்டமன்றத்தில், உத்தியோகபூர்வமாகப் பதவியேற்று அமர்வதற்கு முன்னர், அனைத்து உறுப்பினர்களும் இங்கிலாந்து மன்னருக்கு விசுவாசப் பிரமாணம் எடுக்க வேண்டும் என கியூபெக் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த கியூபெக் முதல்வர், ”இங்கிலாந்து மன்னருக்கு விசுவாசமாக தம்மால் பிரமாணம் எடுக்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.
”கியூபெக் மாகாணத்தில் ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் இதனை ஒரு அவமானமாகவே கருதுகின்றனர்” எனவும் கியூபெக் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து கியூபெக் மாகாண அரசாங்கம் மேன்முறையீடு செய்ய வேண்டும் என, கியூபெக் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் எரிக் டுஹெய்ம் வேண்டுகோள் விடுத்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.


