கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா (B.C.) மாகாணத்தின் சில கடற்கரைப் பகுதிகளில் கடும் மழை மற்றும் பலத்த காற்றுடன் கூடிய சீரற்ற காலநிலை நிலவக்கூடும் என அந்நாட்டு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனுடன், வழக்கத்தைவிட உயர்வான கடல் அலைகள் மற்றும் உயர் அலைநீர் மட்டம் (King Tides) ஏற்படக்கூடும் என்பதால் கரையோரப் பகுதிகளில் வெள்ள அபாயம் அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாகாணத்தின் மத்திய கடற்கரைப் பகுதிகள், வான்கூவர் தீவின் மேற்கு கரையோரப் பகுதிகள் மற்றும் ஹைடா குவாய் (Haida Gwaii) ஆகிய பகுதிகளுக்கு கரையோர வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரை மிதமான புயல் கடல் எழுச்சி மற்றும் பெரிய அலைகளுடன் மிக உயர்ந்த கடல் அலைகளும் ஏற்படக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த இயற்கைச் சீற்றங்களின் ஒருங்கிணைந்த தாக்கத்தினால், வழக்கமாகப் பதிவாகும் மிக உயர்ந்த வானியல் கடல் அலை மட்டத்தைவிடவும் 20 முதல் 50 சென்டிமீற்றர் வரை கடல் நீர்மட்டம் உயரக்கூடும் என சுற்றுச்சூழல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், தெற்கு கடற்கரைப் பகுதிகளின் சில இடங்களுக்கும் கரையோர வெள்ளம் தொடர்பான முன்னெச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. அங்கு கடல் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வியாழக்கிழமை உச்சத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், எதிர்வரும் சீரற்ற காலநிலையைக் கருத்திற்கொண்டு, ஸ்குவாமிஷ் (Squamish) நகராட்சி உள்ளூர் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளது.
அதேவேளை, உயர் கடல் அலைகள் காரணமாக வான்கூவர் தீவின் மேற்கு கரையோரப் பகுதிகளில் சில பொது கடற்கரைப் பகுதிகளுக்கான அணுகலும் தற்காலிகமாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.
கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும், அதிகாரிகளின் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.


