‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் ஒரு பாடலிலாவது நடிகை தமன்னாவை நடனமாட வைக்குமாறு தான் விடுத்த கோரிக்கையை இயக்குநர் நெல்சன் நிராகரித்துவிட்டதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
‘ஜெயிலர்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் 15ஆம் திகதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்தின் விளம்பர நிகழ்வான ‘சூப்பர் ஷோ’ நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், “ஜெயிலர் 2 படத்தில் எல்லாமே இருக்கிறது. ஒரேயொரு குறை தமன்னா இல்லாததுதான்.
ஒரு பாடலுக்காவது தமன்னாவைப் பயன்படுத்துமாறு நெல்சனிடம் கேட்டேன். ஆனால், ‘உங்களுக்குப் பிடிக்கும் என்பதற்காக எல்லாவற்றையும் படத்தில் வைக்க முடியாது’ என அவர் கூறிவிட்டார்” என்று தெரிவித்தார்.
மேலும், “நான் எனக்குப் பிடித்ததை மட்டும் செய்திருந்தால் இந்நேரம் பெங்களூருக்குச் சென்றிருப்பேன். மக்களுக்குப் பிடித்ததைச் செய்ததால்தான் இன்றும் திரைத்துறையில் நீடிக்கிறேன்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
‘ஜெயிலர்’ முதல் பாகத்தில் தமன்னா நடனமாடிய ‘காவாலா’ பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்நிலையில், இரண்டாம் பாகத்தில் தமன்னாவுக்குப் பதிலாக பூர்ணா மற்றும் நோரா ஃபதேகி ஆகியோர் நடனமாடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இத்திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், எஸ்.ஜே. சூர்யா, சுராஜ், வித்யா பாலன், மிதுன் சக்ரவர்த்தி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளதுடன், மோகன்லால் மற்றும் சிவராஜ்குமார் சிறப்புத் தோற்றங்களில் நடித்துள்ளனர்.


