வட மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் நாளை திங்கட்கிழமை வழமைபோல் இயங்கும் என வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் வை. ஜெயச்சந்திரன் அறிவித்துள்ளார்.
வட மாகாணத்தில் நாளை பாடசாலைகள் நடைபெறமாட்டாது என்றும், பரீட்சைகள் இடம்பெறமாட்டாது என்றும் இணையத்தளங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இணையத்தளங்களிலும் சமூக ஊடகங்களிலும் பரவி வரும் வதந்திகள் தொடர்பில் மாகாணக் கல்வித் திணைக்களத்துக்கு அறிவுறுத்தல் வழங்கக்கூடிய அதிகாரமுள்ள தரப்பினரிடமிருந்து எவ்வித உத்தியோகபூர்வ அறிவித்தலும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை. எனவே, வட மாகாணத்துக்கு உட்பட்ட சகல பாடசாலைகளிலும் நாளை (30.11.2026) திட்டமிட்டபடி பாடசாலைச் செயற்பாடுகளும், ஒழுங்கமைக்கப்பட்டவாறு பரீட்சைகளும் நடைபெறும்.
மேலும், இந்த ஆண்டுக்குரிய சகல கல்விச் செயற்பாடுகளும் உரிய காலத்தினுள் நிறைவு செய்யப்பட வேண்டும் என்ற அடிப்படையில், கல்வி அமைச்சின் செயலாளரால் கடந்த 2026.11.23 ஆம் திகதி வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைவாகவே சகல பாடசாலைகளும் தொடர்ந்து இயங்கும்.
இதற்கமைய, நாளை வழமைபோலப் பாடசாலைகளும் பரீட்சைகளும் திட்டமிட்டபடி நடைபெறுவதால், சகல அதிபர்களும் வலயக் கல்விப் பணிப்பாளர்களும் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் வை.ஜெயச்சந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.


