இந்தியா – நியூஸிலாந்து அணிகள் இடையிலான கடைசி மற்றும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிறைஸ்ட்சர்ச் நகரில் உள்ள ஹேக்லி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் நாள் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 85 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 246 ஓட்டங்கள் எடுத்தது. டாம் லேதம் 59, டெவன் கான்வே 31 டேரில் மிட்செல் 31 ஓட்டங்கள் சேர்த்தனர்.
டாம் பிளண்டல் 53 கிளென் பிலிப்ஸ் 36 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தனர். நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய நியூஸிலாந்து அணி 116.3 ஓவர்களில் 356 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தது.
கிளென் பிலிப்ஸ் 36 ரஓட்டங்களில் அன்ஷுல் கம்போஜ் பந்தில் ரிஷப் பந்த்திடம் பிடிகொடுத்து வெளியேறினார்.
நேதன் ஸ்மித் 26 கைல் ஜேமிசன் 19 மேட் ஹென்றி 19 ஓட்டங்களில் ஆகாஷ் தீப் பந்தில் வெளியேறினார். பொறுமையாக விளையாடிய டாம் பிளண்டல் 211 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 89 ஓட்டங்கள் எடுத்த நிலையில் குர்னூர் பிரார் பந்தில் கடைசி வீரராக ஆட்டமிழந்தார்.
இந்திய அணி தரப்பில் ஆகாஷ் தீப் 5 விக்கெட்களை வீழ்த்தினார். அன்ஷுல் கம்போஜ் குர்னூர் பிரார் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர். வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட் வீழ்த்தினார். ஜஸ்பிரீத் பும்ரா 26 ஓவர்களை வீசி 6 மெய்டன்களுடன் 49 ஓட்டங்களை விட்டுக்கொடுத்த நிலையில் விக்கெட் ஏதும் கைப்பற்றவில்லை.
இதையடுத்து துடுப்பாட்டத்தை தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. மேட் ஹென்றி வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஓட்டங்கள் ஏதும் எடுக்காத நிலையில் போல்டானார். இதையடுத்து களமிறங்கிய தேவ்தத் படிக்கல் அதிரடியாக விளையாட முயன்றார்.
மட்டையை சுழற்றிய தேவ்தத் படிக்கல் 20 பந்துகளில், ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 21 ஓட்டங்கள் எடுத்த நிலையில் கைல் ஜேமிசன் பந்தில், விக்கெட் கீப்பர் டாம் பிளண்டலிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.
அடுத்து களமிறங்கிய கேப்டன் ஷுப்மன் கில்லும் அவசரகதியில் விளையாடி விக்கெட்டை பறிகொடுத்தார். 29 பந்துகளை சந்தித்த ஷுப்மன் கில் 3 பவுண்டரிகளுடன் 17 ஓட்டங்கள் எடுத்த நிலையில் கைல் ஜேமிசன் பந்தில் 2-வது சிலிப் திசையில் நின்ற டாம் லேதமிடம் பிடிகொடுத்து நடையை கட்டினார்.
53 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை இழந்த நிலையில் களமிறங்கிய ரிஷப் பந்த் பொறுப்பின்றி விளையாடி தனது விக்கெட்டை எளிதாக பறிகொடுத்தார்.
ஜேக்கப் டபி வீசிய பந்தை ரிஷப் பந்த் விளாசிய போது பாயிண்ட் திசையில் உயரமாக சென்று கைல் ஜேமிசனிடம் கேட்ச் ஆனது.
39 பந்துகளை எதிர்கொண்ட ரிஷப் பந்த் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 23 ரன்கள் சேர்த்தார். சற்று நிலைத்து நின்று பேட் செய்த கே.எல்.ராகுல் 80 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 25 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஜேக்கப் டபி பந்தில் பாயிண்ட் திசையில் நின்ற டெவன் கான்வேயிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.
இதைத் தொடர்ந்து தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்திய வாஷிங்டன் சுந்தர் 60 பந்துகளில் 10 ரன்கள் எடுத்த நிலையில் நேதன் ஸ்மித் பந்தில், 2-வது சிலிப் திசையில் நின்ற டாம் லேதமின் அற்புதமான கேட்ச் காரணமாக ஆட்டமிழந்தார். 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 46 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்தது.
துருவ் ஜூரல் 45 பந்துகளில், ஒரு பவுண்டரியுடன் 7 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
நியூஸிலாந்து அணி தரப்பில் கைல் ஜேமிசன்இ ஜேக்கப் டபி ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். மேட் ஹென்றி நேதன் ஸ்மித் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். கைவசம் 4 விக்கெட்கள் இருக்க 240 ஓட்டங்கள் பின்தங்கியுள்ள இந்திய அணி இன்று 3-வது நாள் ஆட்டத்தை எதிர்கொண்டது.
3-வது நாள் ஆட்டம்: துருவ் ஜூரல் அபாரம்
116 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களை இந்தியா இழந்து தடுமாறிய நிலையில் மூன்றாவது நாள் ஆட்டம் தொடங்கியது. அன்ஷுல் கம்போஜ் ஓட்ம் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.
இதன் பின்னர் 8-வது விக்கெட்டுக்கு ஆகாஷ் தீப் உடன் இணைந்து துருவ் ஜூரல், 46 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். ஆகாஷ் தீப் 52 பந்துகளில் 29 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் பின்னர் களத்துக்கு வந்த குர்னூர் பிரார் உடன் இணைந்து 64 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார் துருவ் ஜூரல். குர்னூர் பிரார் 10 ஓட்டங்களில் வெளியேறினார்.
170 பந்துகளில் 88 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஜேமிசன் பந்தில் துருவ் ஜூரல் ஆட்டமிழந்தார். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 86.1 ஓவரில் 246 ஓட்டங்கள் எடுத்தது. நியூஸிலாந்து அணியை காட்டிலும் இந்தியா முதல் இன்னிங்ஸில் 110 ஓட்டங்கள்பின்தங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.


