நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு 20 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான நட்டஈடு வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட 5 இலட்சம் ரூபா என்பது ஆரம்பக்கட்ட நிவாரணக் கொடுப்பனவு மட்டுமே என்று சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்தார்.
உயிரிழந்த அதிகாரிகளின் அனைத்து இறுதிக்கிரியைகளும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் முழுமையான செலவிலேயே மேற்கொள்ளப்பட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான ஏனைய உதவிகளை வழங்குவதற்கும் திணைக்களம் உரிய கவனம் செலுத்தி வருகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.


