இராணுவத்தின் கட்டுப்பாட்டில் 36 வருடங்களாக உள்ள தமது சொந்தக் காணிகளை விடுவித்து, தங்களை மீண்டும் குடியேற்றக் கோரி யாழ். பலாலிச் சந்தியில் முன்னெடுக்கப்பட்டு வரும் அறவழிப் போராட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை நான்காவது வாரமாகத் தொடர்ந்து நடைபெற்றது.
பலாலி மீள்குடியேற்ற அமைப்பு மற்றும் பலாலி உதயகலைவாணி மக்கள் ஒன்றியம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தமது காணிகளை இராணுவத்தினர் விவசாய நடவடிக்கைகளுக்கும், வர்த்தக நிலையங்களை அமைப்பதற்கும் சொந்தத் தேவைகளுக்காகப் பயன்படுத்தி வருகின்றனர் என்று போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர்.
இதன் காரணமாக 36 வருடங்களாகத் தமது சொந்த நிலங்கள் மற்றும் வீடுகள் இன்றி அகதி நிலையில் வாழ்ந்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இன்று போராட்ட இடத்தில் மக்கள் கொட்டகை அமைத்துத் தொடர் போராட்டத்தை முன்னெடுக்க முயற்சித்த போதிலும், பொலிஸார் அதனைத் தடுத்து நிறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், கடும் வெயிலையும் பொருட்படுத்தாது மக்கள் தமது கோரிக்கைகளை வலியுறுத்தித் தொடர்ந்து வீதியில் அமர்ந்து அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டுவருதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நீண்டகாலமாக நிலமற்ற நிலையில் உள்ள தமக்கு, அரசு உடனடியாகத் தலையிட்டுத் தமது பூர்வீகக் காணிகளை விடுவித்துத் தர வேண்டும் என்பதே தங்களின் ஒரே கோரிக்கை எனப் போராட்டக்காரர்கள் மீண்டும் வலியுறுத்தினர்.


