2027 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு (வரவு செலவுத் திட்ட உரை) நவம்பர் 12 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் செப்டம்பர் 18 ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளதுடன், அதன் முதலாம் வாசிப்பு ஒக்டோபர் 07 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அமைச்சு வாரியான செலவு மதிப்பீடுகளை உள்ளடக்கிய 2027 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம், அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெறுவதற்காக செப்டம்பர் 14 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது.
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் 13 முதல் 20 ஆம் திகதி வரையிலும், குழுநிலை விவாதம் நவம்பர் 21 முதல் டிசம்பர் 14 ஆம் திகதி வரையிலும் இடம்பெறவுள்ளதாக நிதி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.


