சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம், 2026ஆம் ஆண்டுக்கான தீபாவளிப் பண்டிகையை ஸ்ரீ சென்பக விநாயகர் ஆலயத்தில் சிறப்பாகக் கொண்டாடியுள்ளது.
இந்நிகழ்வில் சிங்கப்பூரில் வாழும் இலங்கையர்கள், பல்வேறு சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் இலங்கையின் நண்பர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
சமய வழிபாடுகளுடன் ஆரம்பமான இந்நிகழ்வில், பாரம்பரிய முறைப்படி மங்கள விளக்கேற்றும் நிகழ்வும் இடம்பெற்றது.
இதன்போது உரையாற்றிய இலங்கை உயர்ஸ்தானிகர், கலாசார மரபுகளைப் பாதுகாத்தல், பரஸ்பர புரிந்துணர்வை மேம்படுத்துதல் மற்றும் சமூக உறவுகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் தீபாவளிப் பண்டிகையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
இந்நிகழ்வின் கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்ட GFTN அமைப்பின் பிரதி தலைவர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான நீல் பரேக், இலங்கை மற்றும் சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு இடையிலான வர்த்தகக் கூட்டாண்மைகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்துப் பேசினார்.
அத்துடன், இரு நாடுகளிலும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், சக்தி நுண்கலைகள், சுயம்பு நுண்கலைகள், தத்வா மற்றும் SSVT இசை மற்றும் நடனக் கல்லூரி ஆகியவற்றின் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டன.
சிங்கப்பூரில் இயங்கும் பல்வேறு இலங்கை சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


