Wednesday, October 7, 2026
spot_img
Homeகனடா செய்திகள்கனடாவில் தொலைபேசி பயனர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கனடாவில் தொலைபேசி பயனர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கனடாவில் தொலைபேசி பயனர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடாவின் ஒன்ராறியோ, வாட்டர்லூ பகுதியைச் சேர்ந்த ரிச்சர்ட் லா என்பவர், தனது ‘ரொஜர்ஸ்’ மொபைல் கணக்கு மூலம் 24 மணி நேரத்திற்குள் பல முறை அங்கீகரிக்கப்படாத தொலைபேசி ஆர்டர்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஏனைய வாடிக்கையாளர்களையும் தங்களது தொலைபேசிக் கணக்குகளைத் தவறாமல் பரிசீலிக்குமாறு எச்சரித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் 10 ஆம் திகதி, ‘ஐபோன் 17 புரோ மேக்ஸ்’ ஒன்றை ஆர்டர் செய்ததை உறுதிப்படுத்தும் மின்னஞ்சல் கிடைத்தபோதே தாம் இந்தச் சிக்கலை முதன்முதலில் உணர்ந்ததாக ரிச்சர்ட் தெரிவித்துள்ளார்.

எனினும், அத்தகைய எந்தவொரு ஆர்டரையும் தாம் செய்யவில்லை என அவர் கூறினார்.

அன்று மாலை, ரொஜர்ஸ் நிறுவனத்தின் மோசடி தடுப்புப் பிரிவு ரிச்சர்ட்டின் மனைவியைத் தொடர்புகொண்டு, முதல் ஆர்டர் ரத்து செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளது.

ஆனால், 24 மணி நேரத்திற்குள் தம்பதியரின் இரு மொபைல் எண்கள் மூலமாகவும் மேலும் இரண்டு ஐபோன்கள் அங்கீகரிக்கப்படாமல் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.

தம்பதியரின் உண்மையான முகவரி வாட்டர்லூவில் உள்ளபோதிலும், குறித்த இரண்டு ஐபோன்களும் கியூபெக்கின் தெரெபோன் என்ற முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளன.

கூரியர் நிறுவனத்தைத் தொடர்புகொண்டு ஒரு விநியோகத்தை ரிச்சர்ட் தடுத்து நிறுத்தியபோதிலும், மற்றொரு சாதனம் செப்டம்பர் 15 அன்று கியூபெக் முகவரியில் கையொப்பமிடப்பட்டு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. தனது மனைவியின் தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரி ஊடுருவப்பட்டதன் காரணமாகவே ரொஜர்ஸ் கணக்கை மோசடிக்காரர்கள் அணுக முடிந்தது என ரிச்சர்ட் நம்புகிறார்.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள ரொஜர்ஸ் நிறுவனம், இது தனிப்பட்ட மின்னஞ்சல் கணக்குகள் ஊடுருவப்பட்டதால் ஏற்பட்ட ‘கணக்கு ஆக்கிரமிப்பு மோசடி’ எனக் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கோரியுள்ள நிறுவனம், மோசடி மூலம் பதிவு செய்யப்பட்ட அனைத்துக் கட்டணங்களையும் ரத்து செய்து, கணக்கைப் பழைய நிலைக்குக் கொண்டுவந்துள்ளது.

இவ்வாறான மோசடிகள் தொடர்ச்சியாக உருவெடுத்து வருவதால், மொபைல் போன் வாடிக்கையாளர்கள் மாதம் ஒருமுறையாவது தங்களது கணக்குகள் மற்றும் கட்டண விபரங்களைச் சரிபார்த்து விழிப்புடன் இருக்குமாறு ரிச்சர்ட் லா கேட்டுக்கொண்டுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments