2026ஆம் ஆண்டுக்கான ரைஸிங் ஸ்டார்ஸ் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தான் ‘ஏ’ அணியிடம் இந்தியா ‘ஏ’ அணி 48 ஓட்டங்களால் தோல்வியடைந்துள்ளது.
கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வரும் வளர்ந்து வரும் வீரர்களுக்கான 50 ஓவர் ஆசியக் கோப்பைத் தொடரின் 8ஆவது லீக் போட்டியில் இரு அணிகளும் நேற்று (23) மோதின.
போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் ‘ஏ’ அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 49.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 313 ஓட்டங்களைப் பெற்றது.
அந்த அணியின் ஹசன் நவாஸ் 79 ஓட்டங்களையும், மாஸ் சாதகத் 59 ஓட்டங்களையும், பர்ஹான் யூசுப் 56 ஓட்டங்களையும் பெற்றனர்.
இந்திய அணியின் பந்துவீச்சில் ஹர்ஷித் ராணா, சூர்யன்ஷ் ஷெட்ஜ், விப்ராஜ் நிகாம் மற்றும் பிரின்ஸ் யாதவ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஆயுஷ் பதோனி ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.
314 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணிக்கு வைபவ் சூர்யவன்ஷி மற்றும் அபிஷேக் சர்மா ஆரம்பத்தை வழங்கினர்.
வைபவ் சூர்யவன்ஷி 11 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த போதிலும், அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா 42 பந்துகளில் 70 ஓட்டங்களைக் குவித்தார்.
தொடர்ந்து களமிறங்கிய ஆயுஷ் பதோனி ஓட்டம் எதுவும் பெறாமல் ஆட்டமிழந்தார். மறுபுறம் அணியின் விக்கெட்டுகள் சரிந்தாலும், இந்திய அணித் தலைவர் திலக் வர்மா நிதானமாகத் துடுப்பெடுத்தாடினார்.
அவருக்கு ஒத்துழைப்பு வழங்கிய ஷபாஸ் அகமது 49 பந்துகளில் 56 ஓட்டங்களைப் பெற்றார்.
எனினும், ஏனைய வீரர்கள் பெரியளவில் ஓட்டங்களைக் குவிக்கத் தவறினர். இறுதிவரை போராடிய திலக் வர்மா 100 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார்.
இதன்படி இந்திய ‘ஏ’ அணி 49.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 265 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
இதனால் பாகிஸ்தான் ‘ஏ’ அணி 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதேவேளை, போட்டியின் போது இரு அணிகளின் வீரர்களுக்கும் இடையில் அடிக்கடி ஏற்பட்ட வாக்குவாதங்கள் மற்றும் மோதல் சம்பவங்கள் மைதானத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.


