எதிர்வரும் காலத்தில் தாய்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளுமாறு, தாய்லாந்து துணைப் பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான சிஹாசக் ஃபுவாங்கேட்கியோ (Sihasak Phuangketkeow), ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள தாய்லாந்து துணைப் பிரதமருக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையில் நேற்று (22) நடைபெற்ற இருதரப்புச் சந்திப்பின்போதே, அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை, அடுத்த வருடம் ஒகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள கண்டி எசல பெரஹராவை பார்வையிடுவதற்கு இலங்கைக்கு வருமாறு தாய்லாந்து பிரதமருக்கும் ஜனாதிபதி இதன்போது அழைப்பு விடுத்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க உறவுகள் இத்தகைய இராஜதந்திர விஜயங்களின் ஊடாக மேலும் வலுப்பெறும் என ஜனாதிபதி இந்தக் கலந்துரையாடலின்போது குறிப்பிட்டார்.
அத்துடன், இருதரப்புச் சந்திப்பின்போது மேலும் பல விடயங்கள் தொடர்பில் இரு நாட்டுத் தலைவர்களின் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
வர்த்தகம், முதலீடு, சுற்றுலா மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தத் குறித்த கலந்துரையாடலில் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக விவசாயத் துறைக்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகளை எந்த நேரத்திலும் வழங்கத் தாய்லாந்து தயாராக இருப்பதாகத் துணைப் பிரதமர் தெரிவித்தார்.
தாய்லாந்தில் பணியாற்றும் இலங்கைப் பணியாளர்களைத் தமது நாட்டுப் பிரஜைகளுக்குச் சமமாக நடத்துவதாகவும், அவர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்புரி தொடர்பில் முழுப் பொறுப்பையும் ஏற்பதாகவும் தாய்லாந்து துணைப் பிரதமர் இதன்போது வலியுறுத்தினார்.


