Tuesday, November 24, 2026
spot_img
Homeஉலக செய்திகள்டிரம்ப் அழைப்புகளைப் புறக்கணித்த வடகொரிய அதிபர்

டிரம்ப் அழைப்புகளைப் புறக்கணித்த வடகொரிய அதிபர்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பல்வேறு வழிகளில் தொடர்பு கொள்ள முயன்றும், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் எவ்விதப் பதிலும் அளிக்காமல் அமைதி காத்து வருவதாக The Wall Street Journal செய்தி வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் ஆசியப் பயணத்தை மேற்கொண்ட டிரம்ப், கிம் ஜாங் உன்னைச் சந்திக்க முயற்சித்த போதிலும் இரு தலைவர்களுக்கும் இடையே சந்திப்பு நடைபெறவில்லை.

வெள்ளை மாளிகை அதிகாரிகள் டிரம்பின் கடிதத்தை நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வடகொரியத் தூதரக அதிகாரி ஒருவரிடம் நேரடியாக வழங்கியதாகவும், ஆனால் அடுத்த ஐ.நா. கூட்டத்தில் அந்தக் கடிதம் பிரிக்கப்படாமலேயே அமெரிக்கப் பிரதிநிதி முன் திருப்பி வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக டிரம்பின் முதல் பதவிக்காலத்தில் இரு தலைவர்களும் மூன்று முறை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்த நிலையில், 2019-ஆம் ஆண்டிற்குப் பிறகு வடகொரியா தனது அணு ஆயுத மற்றும் ஏவுகணைத் திட்டங்களைத் தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது.

கடந்த நவம்பர் 17-ஆம் தேதி பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், கிம் ஜாங் உன் சீனாவிற்குப் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாகவும், அங்கு இருவரும் சந்திக்கக் கூடும் என்றும் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

இருப்பினும், நேரடிப் பேச்சுவார்த்தைக்கு வடகொரியா விதித்த நிபந்தனைகளை வாஷிங்டனால் ஏற்க முடியாததாலும், ஆசியப் பயணத்தில் அதிகப் பணிச்சுமை இருந்ததாலும் சந்திப்பு நடைபெறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பியாங்யாங்கில் நடைபெற்ற வெளிநாட்டுத் தூதர்களின் நியமனப் பத்திரங்களைப் பெறும் விழாவில் பேசிய கிம் ஜாங் உன், தேசிய இறையாண்மை மற்றும் பாதுகாப்பைப் பாதுகாக்கும் கொள்கையின் அடிப்படையில் சுதந்திரம், அமைதி மற்றும் நட்புறவுடன் வெளியுறவுத் தொடர்புகளை வளர்க்க வடகொரியா விரும்புவதாகக் கூறியுள்ளார்.

அத்துடன் அணு ஆயுதக் களைப்புக் கோரிக்கையை அமெரிக்கா கைவிட வேண்டும் என வடகொரியா வலியுறுத்தி வருவதால், இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து முடங்கியுள்ளன.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments