Monday, November 23, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்யாழ் பல்கலை மாணவர் மோதல் தொடர்பில் உள்ளக விசாரணை ஆரம்பம்

யாழ் பல்கலை மாணவர் மோதல் தொடர்பில் உள்ளக விசாரணை ஆரம்பம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவப் பீடத்தின் இரு மாணவ குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் உள்ளக விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அப்பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பொலிஸாரினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு மேலதிகமாக, பல்கலைக்கழக நிர்வாகமும் இது தொடர்பில் துரித விசாரணையொன்றை முன்னெடுத்துள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி தெரிவித்தார்.

கடந்த 19 ஆம் திகதி இரவு வேளையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவப் பீடத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவ குழுக்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

பல்கலைக்கழக மாணவர்கள் தங்கியிருந்த தனியார் விடுதியொன்றிற்குள் குறித்த மோதல் இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது 5 மாணவர்கள் காயமடைந்து சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில், அதற்கமைய மோதலுடன் தொடர்புடைய 21 மாணவர்கள் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து, அவர்களை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த மோதலுடன் தொடர்புடைய மேலும் பல மாணவர்கள் கைது செய்யப்படவுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், குறித்த மோதல் பல்கலைக்கழக வளாகத்திற்கு வெளியே இடம்பெற்ற போதிலும், அது தொடர்பில் பொலிஸார் முன்னெடுக்கும் அனைத்து விசாரணை நடவடிக்கைகளுக்கும் பல்கலைக்கழக நிர்வாகத்தின் ஒத்துழைப்பு வழங்கப்படும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவித்தார்.

இந்த மோதல் ஏற்படுவதற்கான காரணங்களைக் கண்டறிந்து, எதிர்காலத்தில் இவ்வாறான மோதல்கள் ஏற்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான  நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் துணைவேந்தர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments