நைஜீரியாவின் எண்ணெய் வளம் மிக்க ரிவர்ஸ் மாநிலத்தில் இடம்பெற்ற நச்சு வாயு கசிவு சம்பவத்தில் 37 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஒக்ரிகா பகுதியில் உள்ள ஒகாரி ஜெட்டி அருகே, சட்டவிரோதமாக எரிபொருள் திருட முயன்றபோது ஏற்பட்ட நச்சு வாயு கசிவே இந்த அனர்த்தத்திற்கு காரணமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சிறிய படகுகளில் ஒகாரி ஜெட்டி பகுதிக்கு சென்றுள்ளனர்.இந்திரமா எலமே பெட்ரோ கெமிக்கல் நிறுவனத்திலிருந்து போர்ட் ஹார்கோர்ட் சுத்திகரிப்பு நிலையம் ஊடாக ஏற்றுமதிக்காக கொண்டு செல்லப்படும் பிரதான எரிபொருள் குழாயில் சட்டவிரோதமாக துளையிட்டு எரிபொருளை திருட அவர்கள் முயற்சித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன்போது, குழாயிலிருந்து அதிக அழுத்தத்துடன் எரிபொருள் வெளியேறியதுடன், அதனுடன் தொடர்புடைய நச்சு வாயு காற்றில் வேகமாக பரவியுள்ளது.இதனால் அப்பகுதியில் இருந்த இளைஞர்களுக்கு கடுமையான மூச்சுத்திணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டதுடன், பலர் அடுத்தடுத்து மயங்கி விழுந்துள்ளனர்.மயக்கமடைந்த பலர் போனி நதியில் விழுந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதுவரை 37 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், மேலும் பலரின் சடலங்கள் ஆற்றில் மிதந்து வருவதாகவும், பலர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.சம்பவத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பில் ரிவர்ஸ் மாநில பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நைஜீரியாவில் நிலவும் வறுமை மற்றும் வேலைவாய்ப்பின்மை காரணமாக சட்டவிரோத எண்ணெய் திருட்டு சம்பவங்கள் பல ஆண்டுகளாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


