Friday, November 27, 2026
spot_img
Homeகனடா செய்திகள்கனடாவில் பதப்படுத்தப்பட்ட காய்கறிகளின் இறக்குமதிக்கு கட்டுப்பாடு!

கனடாவில் பதப்படுத்தப்பட்ட காய்கறிகளின் இறக்குமதிக்கு கட்டுப்பாடு!

உள்நாட்டு உற்பத்தியாளர்களைப் பாதுகாக்கும் நோக்கில், சில பதப்படுத்தப்பட்ட (டின்னில் அடைக்கப்பட்ட) காய்கறிப் பொருட்களின் இறக்குமதிக்கு வரம்புகளையும் மேலதிக வரிகளையும் விதிக்க கனடிய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

பதப்படுத்தப்பட்ட காய்கறிப் பொருட்களின் இறக்குமதி அதிகரித்துள்ளதால் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்குக் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ‘கனடிய சர்வதேச வர்த்தகத் தீர்ப்பாயம்’ கண்டறிந்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முதல் ஆண்டில் 13,000,000 கிலோகிராம் அளவிற்கு வரி ஒதுக்கீட்டு வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த வரம்பிற்குள் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு எவ்வித மேலதிக வரியும் விதிக்கப்படாது.

நிர்ணயிக்கப்பட்ட ஒதுக்கீட்டு வரம்பைத் தாண்டி இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்படும் என நிதித் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் டிசம்பர் 1 ஆம் திகதி (2026) முதல் 2029 ஜூன் 17 ஆம் திகதி வரை இந்த நடைமுறை அமுலில் இருக்கும்.

காலப்போக்கில் இறக்குமதி ஒதுக்கீட்டு அளவு படிப்படியாக 13,500,000 கிலோகிராமுக்கு சற்று அதிகமாக உயர்த்தப்படும் அதேவேளை, வரம்பைத் தாண்டிய இறக்குமதிக்கான வரி 40 சதவீதமாகக் குறைக்கப்படும்.

மெக்சிகோ, சிலி, இஸ்ரேல், கொலம்பியா, தென் கொரியா, பனாமா, பெரு மற்றும் சில வளர்ந்து வரும் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்த வரி மற்றும் வரம்புகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்காக மொத்த ஒதுக்கீட்டில் குறிப்பிட்ட பகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மேலும், கனடாவில் உற்பத்தி செய்யப்படாத சில குறிப்பிட்ட பதப்படுத்தப்பட்ட காய்கறி வகைகளுக்கு வரி விலக்கு கோருவதற்கு வசதியாக, அடுத்த ஆண்டு (2027) ஆரம்பத்தில் ‘பொருள் விலக்கு நடைமுறையை’ ஆரம்பிக்குமாறு வர்த்தகத் தீர்ப்பாயத்திற்கு அரசாங்கம் பணிப்புரை விடுத்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments