கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள லாங்ஃபோர்ட் நகர மக்கள், முன்னாள் மேயர் ஸ்டூ யங்கை மீண்டும் மேயர் பதவிக்குத் தெரிவு செய்துள்ளனர்.
கடந்த தேர்தலில் புதிய வேட்பாளரான ஸ்கொட் குட்மான்சனிடம் தோல்வியடைந்த ஸ்டூ யங், இம்முறை மீண்டும் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார்.
1992ஆம் ஆண்டு லாங்ஃபோர்ட் நகரமாகத் தரமுயர்த்தப்பட்டதிலிருந்து மேயராகப் பணியாற்றிய ஸ்டூ யங், பல ஆண்டுகளாகப் போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
கடந்த தேர்தலில் தனது வெற்றியை உறுதியாகக் கருதியதால், தேர்தல் பிரசாரத்தை உரிய முறையில் முன்னெடுக்கத் தவறியதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், இம்முறை வீடு வீடாகச் சென்று வாக்காளர்களைச் சந்தித்ததுடன், சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கும் கற்றுக்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது வெற்றிக் கொண்டாட்ட நிகழ்விலிருந்து கருத்துத் தெரிவித்த ஸ்டூ யங், “மீண்டும் பணிக்குத் திரும்புவதில் மகிழ்ச்சியடைகிறேன். லாங்ஃபோர்ட் நகரத்திற்காகக் கடுமையாக உழைக்கத் தயாராக இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த வெற்றியின் மூலம், லாங்ஃபோர்ட் நகரின் நிர்வாகப் பொறுப்பை ஸ்டூ யங் மீண்டும் ஏற்கவுள்ளார்.


