Sunday, October 18, 2026
spot_img
Homeஉலக செய்திகள்ஹோர்முஸ் நீரிணை குறித்து ஈரான் வெளியுறவு அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

ஹோர்முஸ் நீரிணை குறித்து ஈரான் வெளியுறவு அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

ஹோர்முஸ் நீரிணையை ஏழு நாட்களுக்குள் மீண்டும் திறப்பது தொடர்பாக அமெரிக்காவுக்கு ஈரான் முன்வைத்துள்ள முன்மொழிவு இன்னும் பரிசீலனையில் இருப்பதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி இன்று(18) ஈரானிய ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

இடைக்கால போர் நிறுத்தம் முறிவடைந்ததைத் தொடர்ந்து, செப்டம்பர் மாதத்தின் நடுப்பகுதியில் ஈரான் இந்த முன்மொழிவை முன்வைத்தது.

இதற்குப் பின்னர் அமெரிக்காவின் பதிலைப் பெற்றுக்கொண்டதாக தெஹ்ரான் ஒப்புக்கொண்டது. எனினும், நீரிணையை மீண்டும் திறப்பதற்கான ஏழு நிபந்தனைகளுக்கும் அமெரிக்கா முழுமையாகப் பதிலளிக்காததால் பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ளதாக ஈரானின் பாதுகாப்புத் தலைவர் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாகக் கருத்து வெளியிட்ட அப்பாஸ் அராக்சி, “அமெரிக்காவிடம் முன்வைக்கப்பட்ட ஏழு நாள் முன்மொழிவின் அடிப்படையில் எமது நிலைப்பாடு தெளிவாக உள்ளது. அமெரிக்கா சில கருத்துகளை முன்வைத்துள்ளது. அவற்றை நாம் பரிசீலித்து வருகிறோம்.

எமது முன்மொழிவு இன்னும் நடைமுறையில் உள்ளது. அமெரிக்கா நேர்மையாகச் செயல்பட்டால், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான வழி தெளிவாக உள்ளது” எனக் குறிப்பிட்டார்.

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கு ஈரான் பல நிபந்தனைகளை முன்வைத்துள்ளது. அவற்றில் முக்கியமானவை, ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க முற்றுகையை நீக்குதல். ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி மீதான அமெரிக்கத் தடைகளை நீக்குதல். பிராந்தியத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இடம்பெறும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருதல்.

இந்த நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்றுக்கொண்டால், ஆறு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என்றும், அதற்கு அடுத்த நாள் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்கலாம் என்றும் அராக்சி தெரிவித்துள்ளார்.

ஈரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பான விவகாரத்தை ஆரம்பத்திலிருந்தே பேச்சுவார்த்தைகளில் முன்னுரிமைப்படுத்த வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக இருப்பது இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கிய கருத்து வேறுபாடாக உள்ளது.

ஈரான் தனது யுரேனியம் செறிவூட்டும் திறனை குறிப்பிடத்தக்க அளவில் குறைக்க வேண்டும் என்றும், அப்போதுதான் அமெரிக்காவின் கோரிக்கைகளை நிறைவேற்றி இரு நாடுகளுக்கும் இடையிலான எட்டு மாதகாலப் போரை முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்றும் அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் இந்த மாத ஆரம்பத்தில் தெரிவித்திருந்தார்.

ஆனால், பேச்சுவார்த்தைகளின் முதல் கட்டத்தில் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கும், அந்தக் கடல்வழிப் பாதையின் பாதுகாப்பை மீட்டெடுப்பதற்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதே ஈரானின் நிலைப்பாடாக உள்ளது.

உலகளாவிய எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) வர்த்தகத்தில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு, போருக்கு முன்னர் இந்த முக்கியமான கடல்வழிப் பாதை ஊடாகவே கொண்டு செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments