இலங்கையின் மீனவர் சங்கங்களின் நிர்வாக, செயற்பாட்டு மற்றும் பொருளாதார திறன்களை மேம்படுத்தும் நோக்கில், இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் 10 நாள் சர்வதேச திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
“இலங்கையில் வலுவானதும் திறமையானதுமான மீனவர் கூட்டுறவுச் சங்கங்களை உருவாக்கி வலுப்படுத்துவதற்காக கூட்டுறவுச் சங்கங்களின் இந்திய களப்பயணம்” என்ற தொனிப்பொருளில் இந்தப் பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் முன்னணி கூட்டுறவு முகாமைத்துவ நிறுவனமான வைகுண்ட் மேத்தா தேசிய கூட்டுறவு முகாமைத்துவ நிறுவனம் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்பயிற்சி, செப்டெம்பர் 14 முதல் 23ஆம் திகதி வரை மகாராஷ்டிராவின் புனே நகரில் நடைபெறவுள்ளது.
இதில் 20 பேர் கொண்ட குழு பங்கேற்கவுள்ளது. காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களைச் சேர்ந்த கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் மற்றும் 17 மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்தியாவில் வெற்றிகரமாக இயங்கும் கூட்டுறவுச் சங்கங்களின் நிர்வாக நடைமுறைகள், உறுப்பினர்களின் பங்கேற்பு, பொருளாதார வலுவூட்டல், சந்தைப்படுத்தல் உத்திகள் மற்றும் நிறுவன திறன் மேம்பாடு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பயிற்சியும் கள அனுபவப் பரிமாற்றமும் வழங்கப்படவுள்ளன.
இதன் மூலம் இலங்கையின் மீனவர் சங்கங்களின் நிர்வாக மற்றும் பொருளாதார திறன்களை மேம்படுத்தி, மீனவர் சமூகத்தின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்துவதற்கான புதிய அணுகுமுறைகளை அறிமுகப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.


