Thursday, September 17, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்ஆகஸ்ட் மாத சிறந்த வீரராக சொனால் தினூஷ

ஆகஸ்ட் மாத சிறந்த வீரராக சொனால் தினூஷ

சர்வதேச கிரிக்கெட் பேரவையின், 2026ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரராக இலங்கை கிரிக்கெட் வீரர் சொனால் தினூஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சொனால் தினூஷ இந்த விருதைப் பெறுவது அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் இதுவே முதல் முறையாகும்.

இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற ICC உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் தொடருக்கு முன்னதாக, இலங்கை அணிக்காக மூன்று டெஸ்ட் போட்டிகளில் மாத்திரமே விளையாடியிருந்தார்.

இடதுகை துடுப்பாட்ட வீரரான சொனால் தினூஷ, இந்தியாவுக்கு எதிரான இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் அதிக ஓட்டங்களைப் பெற்ற வீரராக திகழ்ந்தார்.

அவர் அந்தத் தொடரில் மொத்தமாக 420 ஓட்டங்களைப் பெற்றதுடன், 140 என்ற ஓட்ட சராசரியையும் பதிவு செய்தார். இதில் மூன்று சதங்களும் ஒரு அரைச்சதமும் அடங்குகின்றன.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) சிறந்த வீரராக விருதைப் பெற்ற பின்னர் கருத்து தெரிவித்த சொனால் தினூஷ, தனது கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே இத்தகைய அங்கீகாரம் கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும், ICCக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 165 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. எனினும், சொனால் தினூஷ அந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 100 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 84 ஓட்டங்களையும் பெற்றார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தொடரை 2-0 என இழப்பதைத் தவிர்க்க இலங்கை அணி போராடிய நிலையில், இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதங்களைப் பதிவு செய்த சொனால் தினூஷ, போட்டியை வெற்றி தோல்வியின்றி நிறைவு செய்ய இலங்கை அணிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கினார்.

அந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 103 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் 133 ஓட்டங்களையும் அவர் பெற்றார்.

இந்தத் தொடரில் மூன்று சதங்களைப் பெற்றது தனது கனவு நனவான தருணம் என சொனால் தினூஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பு மற்றும் காலி மைதானங்களில் சொந்த நாட்டு ரசிகர்கள் முன்னிலையில் அந்த சதங்களைப் பெற்றமை, இந்தத் தொடரை தனக்கு மேலும் சிறப்பானதாக மாற்றியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடரின் ஒட்டுமொத்த முடிவு எதிர்பார்த்த வகையில் அமையவில்லை என்றாலும், இரண்டாவது போட்டியில் இலங்கை அணி வெளிப்படுத்திய போராட்ட குணம், நம்பிக்கை மற்றும் உறுதிப்பாடு தங்களைப் பெருமைப்படுத்துவதாகவும் சொனால் தினூஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், போட்டியின் சிறந்த வீரராகவும் தெரிவுசெய்யப்பட்டார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments