Friday, November 27, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்அனைத்துலகத் தமிழர் பேரவைக்கு ஐவர் கொண்ட சுயாதீனத் தேர்தல் ஆணைக்குழு நியமனம்!

அனைத்துலகத் தமிழர் பேரவைக்கு ஐவர் கொண்ட சுயாதீனத் தேர்தல் ஆணைக்குழு நியமனம்!

அனைத்துலகத் தமிழர் பேரவை (FGT), தனது யாப்பிற்கு அமைவாகவும் இடைக்கால நிர்வாக சபையின் ஒப்புதலுடனும் ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட சுயாதீனத் தேர்தல் ஆணைக்குழுவை நியமித்துள்ளது.

கல்வி, சட்டம், தொழில்சார் துறைகள், சமூகத் தலைமைத்துவம் மற்றும் நிறுவன நிர்வாகம் ஆகிய துறைகளில் அனுபவமிக்க ஐவர் இந்த ஆணைக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இதன்படி, கனடாவைச் சேர்ந்த முனைவர் செ. ஸ்ரீதாஸ் ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த சங்கரப்பிள்ளை நடராஜா குலராஜா, சுவிற்சர்லாந்தைச் சேர்ந்த முனைவர் விபுலானந்தர் கௌரிதாசன், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பேராசிரியர் ஈ. ஏ. செல்வநாதன் மற்றும் இலங்கையைச் சேர்ந்த முனைவர் ரவிந்திரகுமரன் நவரத்தினம் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் கல்வி, சட்டம், பொருளாதாரம், சமூகப் பணி, மனித உரிமைகள் மற்றும் நிறுவன நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அனுபவம் பெற்றவர்கள் எனப் பேரவை தெரிவித்துள்ளது.

தேர்தல் கால அட்டவணை மற்றும் நடைமுறைகளை வகுத்தல், உறுப்பினர்களின் தகுதி மற்றும் வாக்களிக்கும் உரிமையைச் சரிபார்த்தல், வேட்புமனுத் தாக்கல் மற்றும் வாக்களிப்பு நடவடிக்கைகளை நிர்வகித்தல், தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளைக் கையாளுதல், முடிவுகளை உறுதிப்படுத்தி அறிவித்தல் உள்ளிட்ட பொறுப்புகள் இந்த ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

ஆணைக்குழு சுயாதீனமாகவும் நடுநிலையாகவும் செயற்பட்டு, தேர்தல் நடவடிக்கைகள் வெளிப்படைத்தன்மையுடனும் மக்களாட்சிக் கோட்பாடுகளுக்கு அமைவாகவும் நடைபெறுவதை உறுதிப்படுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இடைக்கால நிர்வாகத்திலிருந்து யாப்பின் அடிப்படையில் மக்களாட்சித் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்படும் நிர்வாகக் கட்டமைப்பிற்கு மாறுவதற்கான முக்கியமான படியாக இந்த நியமனம் அமைவதாக அனைத்துலகத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

மேலும், தேர்தல் நடைமுறைகள் சுமுகமாக நடைபெறுவதற்கு பேரவையின் உறுப்பினர்கள், நாடுவாரியான செயற்குழுக்கள் மற்றும் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறும் இடைக்கால நிர்வாக சபை கேட்டுக்கொண்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments