Sunday, October 4, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்‘போராட்டம்’: இலங்கை தமிழ் திரையுலகின் கம்பீரமான அடுத்தகட்ட நகர்வு!

‘போராட்டம்’: இலங்கை தமிழ் திரையுலகின் கம்பீரமான அடுத்தகட்ட நகர்வு!

இரசிக்க வைக்கும் பாடல்களும், காட்சிகளின் கனத்தை அதிகரிக்கும் பின்னணி இசையும் படத்திற்குப் பெரு பலம் சேர்க்கின்றன. காட்சிகளின் கோர்வை எங்கும் பிசகாமல், கதையின் வேகத்திற்குத் தகுந்தாற்போல் படத்தொகுப்பு நேர்த்தியாக கையாளப்பட்டுள்ளது.

இலங்கைத் திரையுலக வரலாற்றில் ஒரு புதிய பாய்ச்சலாகவும், காலத்தால் அழியாத முக்கிய மைல்கல்லாகவும் உருவெடுத்துள்ளது ‘போராட்டம்’ திரைப்படம். இலங்கைத் தமிழர்களின் வாழ்வியலோடு பிரித்தெடுக்க முடியாதவாறு பின்னிப்பிணைந்த ஒரு உன்னத உணர்வுதான் போராட்டம். உரிமைக்காக, வாழ்வாதாரத்திற்காக, இருப்புக்காக, நிலத்துக்காக, தம் எதிர்காலச் சந்ததியைப் பாதுகாக்க என வாழ்வின் ஒவ்வொரு நகர்விலும் பிறப்பு முதல் இறப்பு வரை ஏதோவொரு வடிவில் தொடரும் இந்த வாழ்வியல் போராட்டத்தையே தன் முதன்மையான கதைக் களமாகக் கொண்டு இப்படம் கம்பீரமாக எழுந்துள்ளது. ஈழத்து சினிமாத் துறையில் இது ஒரு புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது என்றால் அது மிகையல்ல.

குறிப்பாக, எமது மண்ணில் இன்று மிகப்பெரும் பேராபத்தாக உருவெடுத்துள்ள போதைப்பொருளின் கொடூரத்தையும், இளைஞர்களின் நம்பிக்கையாகவும் அடையாளமாகவும் விளங்கும் கால்பந்து விளையாட்டையும் மையமாகக் கொண்டு இத்திரைப்படம் மிக நேர்த்தியாகப் பின்னப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழர்களின் இயல்பான வாழ்க்கையையும், அவர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் சவால்களையும் எந்தவிதப் பூச்சும் இன்றி மிக இயல்பாகவும் ஆழமாகவும் இத்திரைப்படம் நம் முன் காட்சிப்படுத்துகிறது.

இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாகப் பார்வையாளர்களைத் திரையரங்கு இருக்கைகளோடு ஒன்றிணைத்து இரசிக்க வைத்திருப்பதே இதன் திரைக்கதைக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். தொய்வில்லாத காட்சி யமைப்பும், ஆழமான வசனங்களும் கதையின் கனதியை மேலும் கூட்டுகின்றன. உணர்வுபூர்வமான கதையோட்டத்துக்கு நடுவே, மண்ணின் இயல்பான பேச்சு வழக்கிலான உரையாடல்களும், சுவையான நகைச்சுவைகளும் பார்வையாளர்களுக்கு எந்த இடத்திலும் சலிப்பை ஏற்படுத்தாமல் கதையோடு ஒன்ற வைக்கின்றன.

ஒரு முழுமையான சினிமாவுக்குத் தேவையான அத்தனை தொழினுட்ப அம்சங்களும் இப்படத்தில் மிக நேர்த்தியாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. மண்ணின் இயற்கையான அழகையும், மக்களின் உணர்ச்சிப் பெருக்குகளையும் ஒவ்வொரு சட்டகத்திலும் கலைநயத்தோடு காட்சிப்படுத்தியிருக்கிறது ஒளிப்பதிவு. இரசிக்க வைக்கும் பாடல்களும், காட்சிகளின் கனத்தை அதிகரிக்கும் பின்னணி இசையும் படத்திற்குப் பெரு பலம் சேர்க்கின்றன. காட்சிகளின் கோர்வை எங்கும் பிசகாமல், கதையின் வேகத்திற்குத் தகுந்தாற்போல் படத்தொகுப்பு நேர்த்தியாக கையாளப்பட்டுள்ளது.

சுமார் 110 ஆண்டுகள் நீண்ட வரலாற்றைக் கொண்டு, இன்று உலகளவில் பிரமாண்டமாக வளர்ந்து நிற்கும் தென்னிந்தியத் திரைப்படங்களுக்கு இணையான தொழில்நுட்ப நேர்த்தியுடனும் கலைத்தன்மையுடனும் ‘போராட்டம்’ உருவாக்கப்பட்டுள்ளது வியக்க வைக்கிறது. உலக சினிமா வரைபடத்தில் ஈரானிய திரைப்படங்களுக்கும் ஜப்பானிய திரைப்படங்களுக்கும் எவ்வாறு தனித்துவமான இடமும் முகவரியும் இருக்கிறதோ, அதேபோன்று இலங்கை தமிழ் சினிமாவுக்கும் ஒரு தனித்துவமான அடையாளம் உருவாகி வருகிறது என்பதை இத்திரைப்படம் அழுத்தமாகப் பறைசாற்றுகிறது. தொழில்நுட்ப நேர்த்தி, வலுவான கதைக் களம், நேர்த்தியான இயக்கம் என அனைத்து அம்சங்களிலும் மிளிரும் ‘போராட்டம்’ திரைப்படம் இலங்கைத் தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த பெருமையாகும்!

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments