இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட ‘பெக்கோ சமன்’ என்பவருக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் 40 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் மற்றும் வங்கிக் கணக்குகளை முடக்குவதற்கான உத்தரவை பொலிஸ் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவு இன்று (05) முதல் 14 வேலை நாட்களுக்கு செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முடக்கப்படவுள்ள சொத்துக்களில் 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான அதிசொகுசு பென்ஸ் ரக கார் ஒன்றும், இரண்டு தனியார் வங்கிகளில் உள்ள மொத்தம் 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு நிலையான வைப்புக் கணக்குகளும் அடங்குகின்றன.
குறித்த சொத்துக்கள் நிமந்தி பொன்சேகா என்ற பெண்ணின் பெயரில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவின் பணிப்பாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான சி.டபிள்யூ. விக்ரமசேகரவின் மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


