வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர் திருவிழாவின்போது பெண்ணொருவரின் தாலிக்கொடியை அறுத்த குற்றச்சாட்டில் கொழும்பைச் சேர்ந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தேர் திருவிழாவில் கலந்துகொண்ட பெண்ணொருவரின் தாலிக்கொடி அறுக்கப்பட்டமை தொடர்பில் ஆலய சூழலில் கடமையில் இருந்த பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து துரிதமாக செயற்பட்ட பொலிஸார், ஆலய சூழலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கெமெராக்களின் உதவியுடன் தாலிக்கொடியை அறுத்ததாகக் கூறப்படும் பெண்ணை அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்ணிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், அறுக்கப்பட்ட தாலிக்கொடியும் அவரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.
பின்னர் குறித்த பெண் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸாரால் முற்படுத்தப்பட்ட நிலையில், அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, நல்லூர் ஆலயத்தின் தேர் மற்றும் தீர்த்தத் திருவிழாக்களின் போது சுமார் 45 பவுண் தங்க நகைகள் களவாடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவங்கள் தொடர்பிலும் ஆலய வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கெமெராக்களின் உதவியுடன் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சில சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


