Friday, October 30, 2026
spot_img
Homeகனடா செய்திகள்மொன்றியல் மாநகரசபை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு

மொன்றியல் மாநகரசபை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு

மொன்றியல் மாநகரசபையின் உடலுழைப்புச் சேவை ஊழியர்கள் (Blue-collar workers) நகர நிர்வாகத்துடன் எட்டப்பட்ட புதிய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு அதற்கு ஒப்புதல் அளித்துள்ளனர்.

இதன் மூலம் அடுத்த ஆறு ஆண்டுகளில் உடலுழைப்புச் சேவை ஊழியர்கள் 23 சதவீத சம்பள உயர்வைப் பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஒப்பந்தத்தின் கீழ், உடலுழைப்புச் சேவை ஊழியர்களின் வாராந்த வேலை நேரம் 36 மணித்தியாலங்களில் இருந்து 37 மணித்தியாலங்களாக உயர்த்தப்பட்டுள்ளது.

மொன்றியல் புளூ-காலர் தொழிலாளர்கள் சங்கத்துடன்’ (Syndicat des Cols bleus regroupés de Montréal) எட்டப்பட்ட இந்த ஒப்பந்தம், “கூடுதல் நெகிழ்வுத்தன்மையும் திறனுமிக்க பணிச் சூழலுக்கும் அடித்தளமிட்டுள்ளது” என்று, மொன்றியல் மாநகரசபை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வாக்கெடுப்பில் பங்கேற்ற தொழிலாளர்களில் 78 சதவீதத்திற்கும் அதிகமானோர் இந்த புதிய ஒப்பந்தத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாக, மொன்றியல் புளூ-காலர் தொழிலாளர்கள் சங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மொன்றியல் மேயர் சொரயா மார்ட்டினெஸ் ஃபெர்ராடா (Soraya Martinez Ferrada), “ஒட்டுமொத்தமாக இந்த ஒப்பந்தமானது எமது ஊழியர்களின் உழைப்பிற்கு மதிப்பளிப்பதற்கும், நகராட்சி சேவைகளைத் தொடர்ந்து மேம்படுத்துவதற்கான தேவைக்கும் இடையில் ஒரு சரியான சமநிலையை உருவாக்கியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மாநகரசபையின் சுமார் 6,600 உடலுழைப்புச்சேவை ஊழியர்கள் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல், கூட்டுப் பேர ஒப்பந்தம் ஏதுமின்றி பணியாற்றி வந்த நிலையில், தற்போது இந்த புதிய ஒப்பந்தம் அவர்களுக்குப் பலனளிக்கும் வகையில் எட்டப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத் தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments