Saturday, October 31, 2026
spot_img
Homeகனடா செய்திகள்டொரண்டோவில் அதிர்ச்சி: தந்தை மற்றும் இரு மகள்கள் மீது துப்பாக்கிச்சூடு!

டொரண்டோவில் அதிர்ச்சி: தந்தை மற்றும் இரு மகள்கள் மீது துப்பாக்கிச்சூடு!

டொரண்டோவின் பிரைடில் பாத் பகுதியில் உள்ள ஒரு சொகுசு வீட்டிற்குள் நள்ளிரவில் புகுந்த முகமூடி அணிந்த கொள்ளையர்கள், அங்கிருந்த தந்தை மற்றும் அவரது இரண்டு வளர்ந்த மகள்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

பேவியூ மற்றும் லாரன்ஸ் அவென்யூஸ் அருகே உள்ள ஹைட் பார்க் சர்க்கிள் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் கைப்பாக்கிகள் மற்றும் சுத்தியலுடன் மூன்று நபர்கள் பின்பக்க கதவு வழியாக அத்துமீறி நுழைந்துள்ளனர்.

வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்கள், அங்கு இருந்த கணவன், மனைவி மற்றும் அவர்களின் இரண்டு மகள்களை அச்சுறுத்தியுள்ளனர். அப்போது ஏற்பட்ட மோதலில், தந்தை மற்றும் இரு மகள்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

மேலும், குடும்பத்தில் ஒருவர் சுத்தியலால் பலமாகத் தாக்கப்பட்டுள்ளார். தகவலறிந்து அவசரக்கால மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள், குற்றவாளிகள் எஸ்.யூ.வி ரக காரில் தப்பிச் சென்றனர்.

பாதிக்கப்பட்ட நான்கு பேரும் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இதில் இருவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருந்தபோதிலும், தற்போது உயிருக்கு ஆபத்தான கட்டத்தைத் தாண்டி, தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கொள்ளையர்கள் வீட்டில் இருந்த விலையுயர்ந்த பொருட்களைக் கேட்டு மிரட்டியுள்ளனர்.

எனினும், அவர்கள் எதையும் திருடிச் சென்றார்களா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. சொகுசு கார்களைத் திருடுவதற்காகவே இதுபோன்ற கும்பல்கள் வீடுகளுக்குள் புகுவதாகவும், அந்தப் பகுதி பணக்காரர்கள் வாழும் பகுதி என்பதால் இந்த வீடு இலக்கு வைக்கப்பட்டிருக்கலாம் எனவும் காவல்துறை சந்தேகிக்கிறது.

இதனிடையே, விபத்து நடந்த சிறிது நேரத்திலேயே துப்பாக்கிக் காயத்துடன் மற்றொரு நபர் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கும் இந்தச் சம்பவத்திற்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments