கியூபெக்கின் Saint-Agathe பகுதியில் நடைபெற்ற லாரன்ஷியன்ஸ் காலநிலை உச்சிமாநாட்டில், 53 நகராட்சிகள் மற்றும் எட்டு பிராந்திய மாவட்ட நகராட்சிகளின் பிரதிநிதிகள், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது, காலநிலை மாற்றம் தொடர்பான தங்களது கவலைகளையும் எதிர்பார்ப்புகளையும் மாணவர்கள் நகராட்சி மற்றும் மாகாணத் தலைவர்களிடம் நேரடியாக முன்வைத்தனர்.
குறிப்பாக, பொருளாதார வளர்ச்சிக்கு முன்னுரிமை வழங்கப்படுவதைப் போலவே சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என 15 வயதான அலெக்ஸ் லாஃபிரான்ஸ் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், மாணவர்கள் மத்தியில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பங்கேற்ற 352 பேரில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் காலநிலை நெருக்கடி குறித்து மிகுந்த கவலை கொண்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
அதேநேரம், அண்மையில் நடைபெற்ற கியூபெக் மாகாணத் தேர்தல் பிரசாரங்களின்போது சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான விவாதங்களுக்கும் உறுதியான நடவடிக்கைகளுக்கும் போதிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என மாணவர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
இதற்கிடையில், நகராட்சிகள் தனித்தனியாகச் செயல்படுவதை விட, ஒன்றிணைந்து காலநிலை மாற்றப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதன் ஒரு முக்கிய நடவடிக்கையாக, 50-க்கும் மேற்பட்ட நகராட்சிகள் மற்றும் பிராந்திய மாவட்ட நகராட்சிகளின் ஆதரவுடன், கூட்டாகச் செயல்படுவதற்கான லாரன்ஷியன் ஒப்பந்தமும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இயற்கைப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான நடைமுறைத் திட்டங்களைப் பகிர்ந்துகொள்வது இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
மேலும், ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை ஒவ்வொரு ஆண்டும் புதுப்பித்து, அதன் முன்னேற்றத்தை மதிப்பீடு செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இரண்டாவது வருடாந்திர லாரன்ஷியன்ஸ் காலநிலை உச்சிமாநாடு 2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது.


