அமெரிக்காவிலிருந்து மீட்கப்படும் நாய்களைக் கனடாவுக்குக் கொண்டு வந்து, அவற்றுக்குப் புதிய வீடுகளில் வாழ்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்த உதவி வரும் British Columbia மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், எல்லை தொடர்பான விதிமுறையை மீறியதாகக் கூறி தனது NEXUS அட்டையை இழந்ததுடன், 5,000 அமெரிக்க டொலர் அபராதமும் விதிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
குடிவரவு சட்ட நிபுணர் ஒருவர், இந்த விதிமுறையைப் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லாத ஒரு அரிதான எல்லை விதி எனக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த பல ஆண்டுகளாக, கனடாவில் தத்தெடுக்கப்படவுள்ள மீட்பு நாய்களை அழைத்து வருவதற்காக Karyn Methven அமெரிக்காவின் Washington மாநிலத்துக்குப் பயணம் செய்து வந்துள்ளார்.
ஆனால், கடந்த மாதம் மேற்கொண்ட ஒரு பயணம், அமெரிக்கா–கனடா எல்லையைக் கடந்து அவர் மேற்கொண்டு வந்த இந்தப் பயணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடும் எனத் தெரிகிறது.
மூன்று மீட்பு நாய்களை அழைத்து வருவதற்காக அமெரிக்காவின் Washington மாநிலத்துக்குச் சென்ற Methven, அமெரிக்காவுக்குள் நுழையும்போது NEXUS வழித்தடத்தைப் பயன்படுத்தியுள்ளார். கனடாவுக்குத் திரும்பும்போது, அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு முன் செலுத்த வேண்டிய 20 அமெரிக்க டொலர் கட்டணத்தைச் செலுத்தத் தவறியதாகவும், NEXUS வழித்தடத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“எனது 25 ஆண்டுகால அனுபவத்தில் இதுபோன்ற வழக்குகளை நான் பார்த்ததில்லை. தெளிவாக அறியப்படாத சட்டங்களை மீறுபவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பது போன்ற நடவடிக்கையாக இது உள்ளது” என அவர் தெரிவித்தார்.
இந்த முடிவை எதிர்த்து மேன்முறையீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக Methven தெரிவித்துள்ளார். அதுவரை, வணிக நோக்கங்களுக்காக அமெரிக்காவுக்குப் பயணம் செய்பவர்கள் அதிக கவனத்துடன் இருக்கவும், செலுத்த வேண்டிய கட்டணங்கள் குறித்து முன்கூட்டியே அறிந்துகொள்ளவும், தேவையான ஆவணங்களை முறையாகச் செவ்வை பார்க்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
சாதாரண வழித்தடத்தையோ வணிகப் போக்குவரத்துக்கான வழித்தடத்தையோ பயன்படுத்துமாறும், இவ்வாறான பிரச்சினைகளில் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


