திருகோணமலைத் துறைமுகத்தின் ‘பூம் கோவ்’ (Boom Cove) பகுதியில் இன்று (28) முற்பகல் 7.30 மணியளவில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவினால் உருவான எண்ணெய்ப் படலத்தை அகற்றும் நடவடிக்கைகளை இலங்கை கடலோரப் பாதுகாப்புத் திணைக்களம் ஆரம்பித்துள்ளது.
இந்தச் சுத்தப்படுத்தும் பணிகளுக்காகக் கடலோரப் பாதுகாப்புத் திணைக்களத்தைச் சேர்ந்த ஆறு பேர் கொண்ட குழுவொன்று களமிறக்கப்பட்டுள்ளது.
சுமார் 7 மீற்றர் நீளமும், 2 மீற்றர் அகலமும் கொண்டதாகக் காணப்படும் இந்த எண்ணெய்ப் படலம் மேலும் பரவுவதைத் தடுப்பதற்கும், அதனால் அண்டைய கடல் சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைப்பதற்குமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதற்காக உறிஞ்சும் பொருட்களை மாத்திரம் பயன்படுத்தி இந்தத் துப்பரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடல் மாசுபாடு தொடர்பான இவ்வாறான அவசரச் சூழ்நிலைகளுக்குத் துரிதமாகச் செயற்பட்டு, கடல் வளத்தையும் சுற்றுச்சூழலையும் பாதுகாப்பதற்காக இலங்கை கடலோரப் பாதுகாப்புத் திணைக்களம் இத்தகைய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.


