எதிர்வரும் திங்கட்கிழமை (13) முதல் நெல் சந்தைப்படுத்தல் சபையூடாக நெல் கொள்வனவு நடவடிக்கைகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் மஞ்சுள பின்னலந்த தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், தற்போதைய நாட்களில் அதிகளவில் நெல் அறுவடை செய்யப்படும் பிரதேசங்களை மையப்படுத்தி, நெல் களஞ்சியசாலைகளைத் திறந்து இந்த நெல் கொள்முதல் பணிகள் ஆரம்பிக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.
அதற்கமைய, தற்போது வடக்கு, கிழக்கு பகுதிகளில் நெல் அறுவடை பெருமளவில் ஆரம்பமாகியுள்ளதால், அந்தப் பிரதேசங்களை மையமாகக் கொண்டு நெல் கொள்வனவு முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
நெல் சந்தைப்படுத்தல் சபை ஒரு கிலோ நாடு நெல்லை 120 ரூபாவிற்கும், ஒரு கிலோ சம்பா நெல்லை 130 ரூபாவிற்கும், ஒரு கிலோ கீரி சம்பா நெல்லை 140 ரூபாவிற்கும் கொள்வனவு செய்யவுள்ளதுடன், நெல் கொள்முதலுக்காக தற்போது களஞ்சியசாலைகள் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதன்படி, 143 இடங்களில் உள்ள களஞ்சியசாலைகளில் நெல் கொள்வனவு செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், ஒருவேளை இந்தக் களஞ்சியசாலைகள் முழுமையாக நிரம்பினால், அருகில் உள்ள தனியார் துறை களஞ்சியசாலைகளைப் பெற்றுக்கொள்வது குறித்தும் தற்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாகத் தலைவர் தெரிவித்தார்.


