உலகில் அடுத்த 10 முதல் 20 ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பம் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்றும், நிதி மற்றும் சட்ட அமைப்புகளில் அதன் ஆதிக்கம் அதிகரிக்கக்கூடும் என்றும் வரலாற்றாசிரியரும் எழுத்தாளருமான யுவால் நோவா ஹராரி எச்சரித்துள்ளார்.
எதிர்காலத்தில் பொருட்கள் மற்றும் சேவைகள் அதிகளவில் கிடைக்கும் சூழல் உருவாகும்போது, வழக்கமான பணத்தின் முக்கியத்துவம் குறையக்கூடும் என்ற தொழிலதிபர் எலான் மஸ்க்கின் கணிப்புக்கும் அவர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் ஜெருசலேம் நகரில் அமைந்துள்ள ஹீப்ரு பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பேராசிரியராகப் பணியாற்றும் யுவால் நோவா ஹராரி, உலகப் புகழ்பெற்ற ‘சேப்பியன்ஸ்: மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு’ என்ற நூலின் ஆசிரியராவார்.
மனிதகுலத்தின் வளர்ச்சி, தொழில்நுட்பத்தின் தாக்கம் மற்றும் எதிர்காலச் சவால்கள் குறித்து அவர் தொடர்ந்து கருத்துகளை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி எதிர்காலச் சமூகத்தில் ஏற்படுத்தக்கூடிய மாற்றங்கள் குறித்த அவரது எச்சரிக்கைகள் கவனம் பெற்றுள்ளன.
தற்போது சுகாதாரம், நிதி, வங்கி, சட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அடுத்த 10 முதல் 20 ஆண்டுகளில் நிதி, வங்கி மற்றும் சட்டம் சார்ந்த அமைப்புகளில் ஏ.ஐ. முக்கியப் பங்காற்றுவதுடன், அவற்றின் செயல்பாடுகளில் அதிகக் கட்டுப்பாட்டைப் பெறக்கூடும் என்று ஹராரி எச்சரித்துள்ளார்.
மனிதர்களால் எளிதில் புரிந்துகொள்ள முடியாத சிக்கலான கட்டமைப்புகளைச் செயற்கை நுண்ணறிவால் உருவாக்க முடியும்.
இத்தகைய அமைப்புகள் எவ்வாறு செயல்படுகின்றன, மனிதர்களின் வாழ்க்கையைப் பாதிக்கும் முடிவுகள் எவ்வாறு எடுக்கப்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்வது எதிர்காலத்தில் பெரும் சவாலாக மாறக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
செயற்கை நுண்ணறிவால் ஏற்படக்கூடிய மிகப்பெரிய ஆபத்து, ரோபோக்கள் மனிதர்களைத் தாக்குவது போன்ற காட்சிகளுடன் மட்டும் தொடர்புடையதல்ல என்பது ஹராரியின் கருத்தாகும்.


