கடந்த ஜூன் மாத காலப்பகுதிக்குள் மாத்திரம் 21,565 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பதில் பணிப்பாளர் மருத்துவர் கபில கன்னங்கர எச்சரித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் இது குறித்து விளக்கமளித்த அவர், கடந்த 24 மணித்தியாலங்களில் புதிதாக 1,217 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், நாட்டில் இதுவரை பதிவாகியுள்ள ஒட்டுமொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 55,406 ஆக உயர்ந்துள்ளது எனவும் குறிப்பிட்டார்.
டெங்கு நோய் காரணமாக இந்த வருடத்தில் இதுவரை 32 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் மருத்துவர் கபில கன்னங்கர தெரிவித்தார்.
வழமைப் போன்றே மேல் மாகாணத்திலேயே அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மொத்த நோயாளர்களில் 52.5 சதவீதமானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர்.
கொழும்பு மாவட்டத்தில் 11,392 நோயாளர்களும், கம்பஹா மாவட்டத்தில் 11 006 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர். இந்த இரு மாவட்டங்களுமே டெங்கு பரவலில் முதன்மையாக உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், இந்நிலைமை இன்னமும் அபாயகரமான மட்டத்திலேயே நீடிப்பதாகவும் மருத்துவர் கபில கன்னங்கர எச்சரித்துள்ளார்.


