Thursday, July 2, 2026
spot_img
Homeகனடா செய்திகள்கனடிய மாகாணமொன்றில் பெண்கள் ஆடை மாற்றுமறைகளில் தொடர் திருட்டு: அதிகாரிகள் எச்சரிக்கை!

கனடிய மாகாணமொன்றில் பெண்கள் ஆடை மாற்றுமறைகளில் தொடர் திருட்டு: அதிகாரிகள் எச்சரிக்கை!

கனடாவின் வடக்கு பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள உடற்பயிற்சிக் கூடங்களில், பெண்களுக்கான ஆடை மாற்றுமறைகளில் இடம்பெற்று வரும் தொடர் திருட்டுச் சம்பவங்களைத் தொடர்ந்து உள்ளூர் காவல்துறையினர் கடுமையான எச்சரிக்கை ஒன்றினை விடுத்துள்ளனர்.

பிரின்ஸ் ஜார்ஜ் பொலிஸார் இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

பொதுவான ஆடை மாற்றுமறைகளில் பூட்டப்படாத லாக்கர்களில் அல்லது கவனிப்பாரற்று வைக்கப்படும் பெண்களின் பைகளே பெரும்பாலும் குறிவைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணப்பைகள் மற்றும் பிற தனிப்பட்ட பொருட்கள் திருடப்படுவது மட்டுமின்றி, இரண்டு சம்பவங்களில் பைகளில் இருந்த சாவிகளைப் பயன்படுத்தி, அருகிலுள்ள வாகன நிறுத்துமிடங்களிலிருந்து பாதிக்கப்பட்ட பெண்களின் கார்களும் திருடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர்.

குற்றவாளிகளுக்குத் தாங்கள் என்ன பொருளைத் தேடுகிறோம் என்பதும், அவற்றை எப்படி எளிதாக அணுகுவது என்பதும் நன்றாகத் தெரிந்திருக்கிறது.

இதனால், பைகள் கவனிக்கப்படாமல் இருக்கும் சிறு இடைவெளியைப் பயன்படுத்தி, திருட்டுகள் மிக விரைவாக நடந்து முடிகின்றன என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவங்கள் குறித்த விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வரும் அதேவேளையில், ஆடை மாற்றுமறைகளைப் பயன்படுத்தும் பெண்கள் தங்களது தனிப்பட்ட பொருட்களைப் பாதுகாப்பாக லாக்கர்களில் வைத்துப் பூட்டுவதை உறுதிசெய்யுமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

மேலும், இதுபோன்ற திருட்டுச் சம்பவங்களால் பாதிக்கப்பட்டு, அதனை இதுவரை புகாரளிக்காதவர்கள் உடனடியாகக் காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

குற்றவாளிகளை அடையாளம் காணவும், தொடர்ச்சியாக நடைபெறும் இத்தகைய குற்றங்களுக்குப் பின்னால் உள்ள வலைப்பின்னலைக் கண்டறியவும் பொதுமக்களின் தகவல்கள் எங்களுக்கு மிகவும் அவசியமானவை என காவல்துறை அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments