Monday, November 2, 2026
spot_img
Homeஉலக செய்திகள்டிக்டொக் பிரபலத்தின் திருமண நிகழ்வு – சனநெரிசலில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு

டிக்டொக் பிரபலத்தின் திருமண நிகழ்வு – சனநெரிசலில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு

பாகிஸ்தானின் சியால்கோட் நகரில் டிக்டொக் (TikTok) பிரபலம் ஒருவர் ஏற்பாடு செய்திருந்த திருமணக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட சனநெரிசலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் ‘Mr Pattlo’ என அறியப்படும் முஹம்மத் அன்சார் ஜட் என்பவரின் மெஹந்தி நிகழ்வு, கடந்த சனிக்கிழமை இரவு, டஸ்கா வீதியில் அமைந்துள்ள ஃபராஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வில் அதிர்ஷ்டக் குலுக்கல் மூலம் கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்ததால், பெருமளவான மக்கள் அங்கு திரண்டிருந்தனர்.

இதன்போது, மைதானத்திற்குள் மக்களை அனுமதிப்பதற்காக ஏற்பாட்டாளர்கள் நுழைவாயில்களைத் திறந்தபோது ஏற்பட்ட திடீர் நெரிசலில் பலர் கீழே விழுந்து, ஏனையவர்களால் மிதிபட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் முஹம்மத் அகீல் (வயது 30) என்பவர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாகப் பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

காயமடைந்தவர்கள் மீட்புக் குழுவினரால் அல்லாமா இக்பால் நினைவு போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் பெரும்பாலானோருக்கு முதலுதவி வழங்கப்பட்ட பின்னர் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சிலர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆரம்பகட்ட தகவல்களின்படி, 14 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் வெளியான பொலிஸ் அறிக்கைகளில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 18 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் நிகழ்வுக்கான அனுமதி நிபந்தனைகளை மீறியதாகக் கூறி, குறித்த டிக்டொக் பிரபலம் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பெயர் குறிப்பிடப்பட்ட ஒன்பது பேருக்கு எதிராகவும், அடையாளம் காணப்படாத 40 முதல் 45 பேருக்கு எதிராகவும் பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் ஆறு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments