எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப முச்சக்கர வண்டிகளுக்கான சவாரி கட்டணங்களை அதிகரிப்பதற்கு தேசிய ஐக்கிய முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் மற்றும் கைத்தொழிலாளர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் எல். ரோஹண பெரேரா தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில் முதல் கிலோமீற்றருக்கு அறவிடப்படும் 110 ரூபா – 120 ரூபாவாகவும் இரண்டாவது கிலோமீற்றரிலிருந்து அறவிடப்படும் 90 ரூபாய் – 100 ரூபாவாகவும் திருத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்த அவர், கடந்த மாதத்தைப் போலவே இந்த மாதத்திலும் எரிபொருள் விலை அதிகரித்துள்ளதுடன் ஒட்டுமொத்தமாக லீற்றர் ஒன்றுக்கு 25 ரூபாய் வரை விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளதுடன் தற்போது சந்தையில் சமையல் எரிவாயுவை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் கடும் நெருக்கடிக்குள்ளாகியிருப்பதாகவும் அவர் கூறினார்.
இந்த புதிய கட்டணத் திருத்த யோசனையைத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கவுள்ளதுடன் எதிர்வரும் சில நாட்களில் அவர்களின் பதிலை எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கான சாதகமான பதில் கிடைக்காவிட்டால் கட்டண மீட்டரை திருத்தியமைக்கும் நிறுவனங்களுடன் கலந்துரையாடி சடுதியாக கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்படும் என்றும் இல்லையெனில் இந்தத் தொழிலை தொடர்ந்து செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்படுவோம் என்று அவர் சுட்டிக்காட்டினார்


