இலங்கை சுங்கத்தின் Paperless Document Processing வேலைத்திட்டத்தை விரைவுபடுத்தும் நோக்கில், நேற்று (19) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் தலைமையில், இலங்கை வர்த்தக சம்மேளனம், சுங்கத் தீர்வை முகவர் அமைப்பு, இலங்கை சுங்க அதிகாரிகள் மற்றும் ஏனைய தரப்பினர்களின் பிரதிநிதிகள் பங்கேற்புடன் கலந்துரையாடல் இடம்பெற்றது.
காகிதப் பயன்பாட்டைத் தவிர்த்து, சுங்கப் பதிவுகளையும் அது தொடர்பான ஆவணங்களையும் மின்னணு முறையில் சமர்ப்பிக்குமாறு இறக்குமதியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் சுங்க தீர்வை முகவர்களுக்கு தெளிவுபடுத்துவதும் அவர்களை ஊக்குவிப்பதுமே இந்தக் கலந்துரையாடலின் நோக்கமாகும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க,
இலங்கை சுங்கத்தினால் சுங்கப் பதிவுகள் மற்றும் ஆவணங்களை இணையவழியில் ஏற்றுக்கொள்வதற்குத் தேவையான அனைத்து தொழில்நுட்ப வசதிகளும் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதால், வர்த்தக சமூகம் இனிமேலும் பாரம்பரிய அச்சிடப்பட்ட ஆவணங்களைப் பயன்படுத்தி சுங்கத்தில் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை எனக் குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் அனைத்து சுங்கப் பதிவுகளும் அது சார்ந்த ஆவணங்களும் காகிதப் பயன்பாடின்றி மின்னணு முறையில் மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதியின் செயலாளர் வலியுறுத்தினார்.
இங்கு கருத்துத் தெரிவித்த இலங்கை வர்த்தக சம்மேளனப் பிரதிநிதிகள்,
இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக்குவதற்கு தங்களது முழுமையான ஆதரவை வழங்குவதாகவும், ஜனாதிபதி அலுவலகத்துடன் இணைந்து தங்களது உறுப்பினர்களுக்கு தெளிவூட்டும் வேலைத்திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தனர்.
மேலும், சுங்கக் தீர்வை முகவர்கள் குறிப்பிடுகையில், இந்தப் புதிய வழிமுறை காரணமாகச் சில உறுப்பினர்களிடையே தொழில் இழப்பு குறித்து அச்சம் நிலவுகின்ற போதிலும், இந்த டிஜிட்டல் மாற்றத்தின் மூலம் அவர்களின் சேவைகளை தொழில்முறை மற்றும் செயற்திறனான மட்டத்திற்கு உயர்த்த முடியும் என்பதே இதன் உண்மை நிலை ஆகும் . எனவே, இந்தத் திட்டத்தை விரைவாகச் செயல்படுத்துவதற்குத் தங்களது முழுமையான ஆதரவை வழங்குவதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
இலங்கை சுங்கத்தின் பணிப்பாளர் ருவன் திசேரா, சிரேஷ்ட பிரதிப் பணிப்பாளர் அஷான் வீரமன், வருமான நிர்வாகம், மறுசீரமைப்பு மற்றும் நவீனமயப்படுத்தல் பிரிவின் பணிப்பாளர்களான டப்ளியூ. எல். சி. திலகசிறி, எம். ஏ. பிரேமலால் ஆகியோரும், இலங்கை வர்த்தக சம்மேளனம், சுங்கத் தீர்வை முகவர்கள் அமைப்பு மற்றும் இலங்கை சுங்கம் உள்ளிட்ட நிறுவனங்களின் அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.


